கவிதைகள்

மண்ணிலே இருந்துமே அகற்றிடல் மனிதமே!… ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கீரியும் பாம்புமாய் இருப்பது மேலல்ல

கிளியும் பழமுமாய்  இருப்பது மேலாகும் 

பருந்தாய் இருந்து விருந்தாய் கோழியை

கவர்ந்து மகிழ்வதை களைந்திட எண்ணுவோம்  !

 

வண்ணத்து பூச்சிகள் மதுவுண்டு  மலர்களில்

தந்திடும் காட்சியை மனமதில் இருத்துவோம் 

புண்படும் எண்ணமாய் கணைகளை எறிவதை

மண்ணிலே இருந்துமே அகற்றிடல் மனிதமே  !

 

தாவிடும் அணிலினை தடியினால் அடிப்பதும்

தளர்ந்திடும் மானினை கொன்றிட நினைப்பதும்           

பால்தரும் பசுவை பதனிட்டு உண்பதும்

பழியொடு பாவத்தை பரிசெனத் தந்திடும்  !

 

வீட்டிலே வளர்த்திடும் ஆட்டினைக் கொல்வதும்                   

விளையாடும் முயலை விரட்டியே வதைப்பதும்

பாட்டினை இசைக்கும் குயிலினை அடிப்பதும்

பாவியர் ஆக்கும் செய்லென உணர்வோம்  ! 

 

மலர்ந்திடும் பூவை கசக்கிட நினைப்பதும்

கனிந்திடும் கனியை கல்லினால் அடிப்பதும் 

நிழல்தரும் மரத்தை வெட்டியே சரிப்பதும்

நிலத்தினில் செய்வது நெறியினை அழித்திடும் !

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *