இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் மிக மோசமான, இன்றுவரை தொடர்கின்ற ஒரு சாபக்கேடு!

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் மிக மோசமான, இன்றுவரை தொடர்கின்ற ஒரு சாபக்கேடு இருக்கிறது என்றால், அது ‘துரோகிப் பட்டம்’ கட்டும் மலின அரசியல்தான்.
தங்களது அரசியல் கருத்துகளுக்கு எதிரானவர்களை, மாற்றுச் சிந்தனை கொண்டவர்களை, தங்களது கொள்கையோடு முரண்படுபவர்களை விவாத ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் கையில் எடுக்கும் ஆகச்சிறந்த ஆயுதம் இது.
இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கலாச்சாரம் எப்படி உருவானது?
அதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார்?
என்பதை விரிவாக பார்க்க வேண்டிய தேவை வளர்ந்துவரும் தற்கால சமூகத்திற்கு உண்டு.
தமிழ்ச் சமூகத்தில் ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை ஒழித்துக்கட்டி, மாற்றுக்கருத்துடையோரை சமூகப் பஹிஷ்காரம் செய்யும் ‘துரோகி’ கலாச்சாரத்தை முறைப்படி தொடங்கி வைத்த பெருமை இலங்கைத் தமிழரசுக்கட்சியையே சாரும்.
1950-60களில் உருவான இந்த நச்சு அரசியல், தேர்தல் இலாபங்களையும் மக்களின் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது.
மக்களுக்கு நிஜமான உள்கட்டமைப்பு, கல்வி, வாழ்வாதார அபிவிருத்திகளைச் செய்து காட்டும் தலைவர்களை, மேடைப் பேச்சுகளால் மட்டுமே பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எதிர்கொள்ளத் தெரிவதில்லை.
தங்களது பலவீனத்தை மறைக்க, அவர்கள் கண்டுபிடித்த சூத்திரம் தான் “சிங்கள அரசின் ஏஜென்ட்”, “தமிழினத் துரோகி” என்ற முத்திரைகள்.
இந்த விசமத்தனமான துரோகிப் பட்டம் கட்டும் கலாச்சாரம் அன்றோடு நின்றுவிடவில்லை;
அன்று விதைக்கப்பட்ட அந்த நச்சு விதை, இன்றுவரை தமிழ் அரசியல் தளத்தில் மாற்றுக்கருத்துடையோரை நசுக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தின் மேயராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அல்பிரட் துரையப்பா உண்மையான ஒரு மக்கள் சேவகன்.
அவர் ஒருபோதும் தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கவில்லை.
மாறாக, மத்திய அரசுடன் இணக்கமான அரசியலை மேற்கொண்டு யாழ்ப்பாண மண்ணிற்குத் தேவையான அபிவிருத்திகளைச் செய்து காட்டினார்.
யார் இந்த அல்பிரட் துரையப்பா?
அல்பிரட் தங்கராஜா துரையப்பா இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார்.
இவர் தொழில்ரீதியாக ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் (Lawyer) ஆவார். யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.
இவர் யாழ்ப்பாணத்தின் செல்வாக்குமிக்க ‘வெள்ளாளர்’ சமூகத்தைச் சேர்ந்தவர். எனினும், சாதிச் சமத்துவத்தை விரும்பியவராகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றியவராகவும் அறியப்பட்டார்.
தாழ்த்தப்பட்ட சாதியினரும் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என போராடியவர், செய்து காட்டியவர், இதனால் மேட்டுக்குடி வெள்ளாளரின் வெறுப்புகளை ஏராளமாக சம்பாதித்த நல்ல மனிதர்.
“ப**ளனை தலையில் தூக்கி வைத்திருப்பவன்” என யாழ்ப்பாண சுவரெங்கும் சிவப்பு வர்ணத்தால் எழுதி தமிழரசுகட்சியால் சேறடிக்கப்பட்டவர் துரையப்பா.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக (Mayor) 1960களிலும் 1970களிலும் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 இல் யாழ்ப்பாணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (MP) சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) இணைந்து மத்திய அரசுடன் இணக்கமான அரசியலை மேற்கொண்டார்.
துரையப்பாவை தமிழரசுக்கட்சி மேட்டுக்குடி வெள்ளாளிய lobby வெறுக்கக்காரணம் அவர் யாழ் மண்ணில் செய்து காட்டிய அபிவிருத்திகள் தான்.
சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கம் (Duraiappah Stadium) இவரால் உருவாக்கப்பட்டது. இது வடபகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கப் பெரிதும் உதவியது.
வடமாகாணத்தின் பிரதான போக்குவரத்து மையமாக விளங்கும் யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தினார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ். பொது நூலகத்தின் நவீன விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் முக்கியப் பங்காற்றினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கொண்டுவந்தமை என ஏராளமான அபிவிருத்திகளை குறிப்பிட்டு காட்டலாம்.
இன்றும் நிலைகுலையாமல் இருக்கும் யாழ்ப்பாணக் குடியேற்றச் சந்தை (Grand Bazaar) மற்றும் நகரின் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வடிகால் அமைப்புகளைச் சீரமைத்தார்.
துரையப்பாவின் மறைவுக்குப் பின் கடந்த 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பல அரசியல் தலைவர்களைக் கண்டுள்ளது.
ஆனால், அவரைப் போன்ற ஒரு வளர்ச்சியை இதுவரை எந்த அரசியல்வாதியாலும் எட்டப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
காரணம் இதுவரை வந்த அரசியல்வாதிகள் யாழ் நகரை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்ததே தேர்தல் வாக்குறுதிகளுக்காக தான் தவிர வேறொன்றும் இல்லை.
அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதி கொடுத்து வாக்குகளை அள்ளி வெற்றி பெற்ற பின்னர் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவது தமிழ் அரசியல்வாதிகளின் வாடிக்கை.
1970களில் இலங்கையில் தமிழ் தேசியவாதம் உச்சமடைந்திருந்தது. குறிப்பாக செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி, சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தது.
இங்கே பண்டாரநாயகவும் கத்தோலிக்கன் செல்வநாயகமும் கத்தோலிக்கர் பண்டா பௌத்தத்தை தூக்கிப் பிடித்தார் செல்வநாயகம் சைவரைகாக்க காவல் தெய்வமாக இருவரும் மாரி பிரித்தாண்டனர்.
துரையப்பாவின் அரசியல் , அபிவிருத்தி நகர்வுகள் மக்கள் நலத்திட்டங்கள் அன்றே ஆரம்பித்த போலித் தமிழ்தேசிய வாதிகளின் அரசியல் தலைமைத்துவத்திற்கு பேரிடியாகவே இருந்தது.
துரையப்பா சிறிமாவோ பண்டாரநாயக்கவின் SLFP கட்சியில் சேர்ந்தார். 1972 ஆம் ஆண்டு சிறிமாவோ அரசு கொண்டு வந்த புதிய அரசியலமைப்பு, தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதாகத் தமிழரசுக்கட்சி கருதியது. ஆனால், துரையப்பா அரசுடன் இணங்கிச் செயல்பட்டார்.
1972 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் கொண்டுவந்த புதிய அரசியலமைப்பு (First Republican Constitution), இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் கல்வி உரிமைகளைப் பொறுத்தவரை மிக மோசமான தழும்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்திய ஒரு மைல்கல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தமிழரசுக்கட்சி இதனைத் “தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஆவணம்” என்று பிரசாரம் செய்ததில் வலுவான உண்மைகள் இருந்தன.
ஆனால், அதேநேரம் அல்பிரட் துரையப்பா ஏன் அரசுடன் இணங்கிச் செயல்பட்டார்? என்ற நாணயத்தின் மறுபக்கத்தையும் நாம் நடுநிலையாகப் பார்க்க வேண்டும்.
அதற்கு முன்னர் வரலாற்றை மீண்டும் தூசு தட்டி பார்க்கவேண்டும்.
1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு அதுவரை தமிழர்களுக்கு இருந்த சில முக்கிய சட்டப் பாதுகாப்புகளை அடியோடு நீக்கியது.
பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்ட ‘சோல்பரி அரசியலமைப்பில்’ இருந்த பிரிவு 29 (Section 29) என்பது சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பரணாக இருந்தது.
எந்தவொரு சிறுபான்மைச் சமூகத்திற்கும் எதிராக நாடாளுமன்றம் பாரபட்சமான சட்டங்களை இயற்ற முடியாது என்று அது தடுத்தது.
1972 அரசியலமைப்பில் இப்பிரிவு முற்றிலும் நீக்கப்பட்டது. இதனால் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றம் தமிழர்களுக்கு எதிரான சட்டங்களை எளிதாக இயற்றும் சூழல் உருவானது.
இலங்கையின் உத்தியோகபூர்வ மதமாக இல்லாவிட்டாலும், “பௌத்த மதத்திற்கு முதன்மை இடமளிக்கப்படும்” என்றும், அதனைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
இது மதச்சார்பற்ற தன்மைக்கு முரணாக, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைக் கொண்ட தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக உணர்த்தியது.
1956 இன் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் இந்த அரசியலமைப்பின் மூலம் உத்தியோகபூர்வமாக நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ் மொழிக்கான நியாயமான உரிமைகள் மறுக்கப்பட்டன.
இந்த காலகட்டத்தில்தான் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான ‘தரப்படுத்தல் முறை’ கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை விட அதிக புள்ளிகள் பெற்றாலும் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அச்சட்டம் ஒரு வருட காலமே நடைமுறையில் இருந்தது என்பதே உண்மை. ஆனால் அதையே இன்னமும் தேர்தல் மேடைகளில் போலித் தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் மேடைகளை அழங்கரிக்கின்றது.
தமிழரசுக்கட்சி இதனை எதிர்த்ததில் நியாயம் இருந்தது. தமிழர்களின் உரிமைகள் சட்டப்பூர்வமாகவே நசுக்கப்பட்டன என்பது கசப்பான உண்மை.
தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதை துரையப்பாவும் அறிந்திருந்தார். ஆனால், அதற்காக அவர் கையாண்ட ‘அரசியல் அணுகுமுறை’ தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.
எதிர்ப்பு அரசியலால் தீர்வு வராது என்ற நம்பிக்கையை கொண்டிருந்தார் துரையப்பா. “அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டே இருந்தால் யாழ்ப்பாண மக்கள் பட்டினியாலும் வறுமையாலும் மடிவார்கள்” என்று துரையப்பா கருதினார்.
அரசாங்கத்தோடு முரண்படுவதை விட, அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணக்கமாகப் போய், தமிழர்களுக்கான சலுகைகளையும், வேலைவாய்ப்புகளையும், நிதியையும் பெற வேண்டும் என்று அவர் நம்பினார்.
தமிழரசுக்கட்சி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து, மேடைகளில் உணர்ச்சிப் பேச்சுகளைப் பேசிக் கொண்டிருந்தபோது, துரையப்பா மத்திய அரசுடன் பேசி யாழ்ப்பாண இளைஞர்களுக்கு அரச வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தார்.
விவசாயிகளுக்கான மானியங்கள், உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகள், கல்வி நிறுவனங்களுக்கான நிதியுதவிகளைப் பெற்றார்.
உரிமைப் போராட்டம் என்ற பெயரில் சமூகம் பின்தங்கிவிடக் கூடாது; கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு, நூலகங்கள், நல்ல சாலைகள் மூலமே அடுத்த தலைமுறையை உயர்த்த முடியும் என்ற ‘யதார்த்த வாதத்தை’ (Pragmatism) அவர் முன்வைத்தார்.
துரையப்பா செய்தது ‘அபிவிருத்தி அரசியல்’ (Development Politics).
தமிழரசுக்கட்சி செய்தது ‘உரிமை அரசியல்’ (Rights Politics).
இரண்டுமே ஒரு சமூகத்திற்குத் தேவையானவைதான். ஆனால், தமிழரசுக்கட்சி துரையப்பாவின் ‘அபிவிருத்தி அரசியலை’ உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்தியது.
துரையப்பாவின் இணக்க அரசியல் காரணமாக யாழ்ப்பாண மக்களுக்குப் நன்மைகள் கிடைப்பதையும், அதனால் அவரது மக்கள் செல்வாக்கு உயர்வதையும் கண்ட தமிழரசுக்கட்சித் தலைவர்கள் பயந்தனர்.
துரையப்பாவின் வழிமுறை வென்றுவிட்டால், தங்களது ‘எதிர்ப்பு அரசியல்’ மேடைகள் காலியாகிவிடும் என்பதை உணர்ந்தனர்.
எனவேதான், 1972 அரசியலமைப்பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட கோபத்தை, அப்படியே துரையப்பாவின் பக்கமாகத் திருப்பினார்கள்.
“அரசியலமைப்பு மூலம் தமிழர்களின் உரிமைகளைப் பறித்த சிறிமாவோ அரசாங்கத்தின் கூட்டாளிதான் இந்த துரையப்பா; எனவே இவனும் தமிழினத் துரோகிதான்” என்று நச்சுப் பிரசாரம் செய்தனர் தமிழரசு கட்சியினர்.
சுருக்கமாகக் கூறின், 1972 அரசியலமைப்பு தமிழர்களின் உரிமைகளைப் பறித்தது என்பது 100% உண்மை. ஆனால், அதற்கு துரையப்பா காரணமல்ல.
மத்திய அரசுடன் இணங்கிப் போய், அந்த மோசமான சூழலிலும் தன் யாழ். மக்களுக்கு என்ன நன்மைகளைப் பிடுங்க முடியுமோ, அதைச் செய்யவே அவர் முயன்றார்.
ஆனால், சுயநல அரசியல்வாதிகள் அந்த உரிமையிழப்பின் ஒட்டுமொத்தப் பழியையும் துரையப்பாவின் தலை மேல் சுமத்தி, அவரை ஒரு துரோகியாகச் சித்திரிக்க, தீவிரவாதப் பாதையில் இருந்த வாலிபர்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இல்லை தந்நுரோபாயமாக 16 வயது சிறுவனை முளைச்சலவை செய்து அவன் கையில் துப்பாக்கை கொடுத்து படுகொலை செய்ய தூண்டினார்.
16 வயது பிரபாகரன் போலீசாரிடம் மாட்டினால் சிறுவர் பராமரிப்பு மையத்திற்கு வருடமோ ஆறு மாதமோ தண்டனை பெற்று திரும்பலாம் என்ற குறுக்குவழியில் சிந்தித்து செல்வநாயகம் தலைமையிலான போலித்தேசி வாதிகள் துரையப்பாவை தீர்த்துக்கட்ட முடிவுகட்டினர்.
அந்த காலகட்டத்தில் 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் ஏற்பட்ட கலவரத்தில் 9 தமிழர்கள் மின்சாரம் தாக்கிப் பலியாயினர். இந்தத் துயரச் சம்பவத்திற்கு, அப்போதைய ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளியாக யாழ்ப்பாணத்தில் இருந்த துரையப்பாவே காரணம் என தமிழரசுக்கட்சி குற்றம் சாட்டியது.
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியின் ஏகபோக செல்வாக்கிற்குத் துரையப்பாவின் மக்கள் செல்வாக்கு பெரும் சவாலாக இருந்தது.
இதனால், அவரை அரசியல் ரீதியாக வீழ்த்த, அவர் “சிங்கள அரசின் ஏஜென்ட்” என்றும், “தமிழினத் துரோகி” என்றும் தமிழரசு கட்சியினரால் பிரசாரம் செய்யப்பட்டது.
அப்போதைய காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் நிலவிய அரசியல் சூழலைத் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் கையாண்ட விதம் தீவிரவாதத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் (அமிர்தலிங்கம் போன்றோர்) மேடைகளில் உணர்ச்சிவசப்படக் கூடிய வாலிபர்களை நோக்கி, “துரோகிகளை ஒழிக்க வேண்டும்”, “ஆயுதம் ஏந்தத் தயங்கக் கூடாது” என மிக ஆக்ரோஷமாகப் பேசினர்.
இந்த பேச்சுக்களை கேட்டே பொட்டம்மான் போன்றோர் விரலை கிழித்து அந்த இரத்ததில் பொட்டு வைத்தனர் என்பது வரலாறு.
அரசியல் முதிர்ச்சியற்ற, உலகப் பொதுவறிவு (கல்வியறிவு) குறைந்த, இரத்தக் கொதிப்பும் (Adrenaline Rush) துடிப்பும் உள்ள இளைஞர்களையும் ஆயுதங்களுடன் இந்திய கடல் எல்லையால் கடத்தலில் ஈடுபட்ட நிலல் தாதாக்கள் கள்ளக் கடத்தல்காரர்களையும் மிக எளிதாக மூளைச்சலவை (Brainwash) செய்துவிடலாம் என்பதுதான் சுயநல அரசியல்வாதிகளின் எக்காலத்திற்குமான தந்திரம்.
இப்போது பாதால உலகக்குழு என்ற சொல்லாடல் அப்போதைய கடத்தல்கார கும்பலுக்கு மிகப்பொறுத்தமாக இருக்கும்.
தங்களது கைகள் அழுக்காகாமல், தங்களது பிள்ளைகளை உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, ஏழை வீட்டு இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டித் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.
“துரோகிகளை ஒழியுங்கள்… ஆயுதம் ஏந்துங்கள்…” என மேடைகளில் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் முழங்கிய ஆக்ரோஷமான, நச்சுத்தன்மை வாய்ந்த பேச்சுகளின் வலையில் விழுந்தவர்தான் வாலிபராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.
அரசியல்வாதிகள் மேடைகளில் விதைத்த ‘துரோகி’ என்ற சொல்லின் ஆபத்தான தீவிரத்தை உணராமல், அதை நிஜமென்று நம்பிய பிரபாகரன், துரையப்பாதான் தமிழர்களின் எதிரி என மூளைச்சலவை செய்யப்பட்டார்.
இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையின் (Adrenaline Rush) விளைவாகவே, 1975 ஜூலை 27 அன்று சுழிபுரம் பொன்னாலை வரதராஜபெருமாள் கோவிலில் வைத்து துரையப்பாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் பிரபாகரன்.
துரையப்பாவின் கொலை, இலங்கையின் தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றின் முதல் அரசியல் படுகொலையாகப் பதிவானது.
தமிழரசுக்கட்சி அரசியல் லாபத்திற்காக விதைத்த வன்முறைப் பேச்சு, பின்னாளில் அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத ஒரு பெரும் ஆயுதப் போராட்டமாக வெடித்தது.
துரையப்பாவின் படுகொலைக்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பல தமிழ் அரசியல் தலைவர்களைக் கண்டுவிட்டது. ஆனால், துரையப்பா செய்த அபிவிருத்தியில் ஒரு சதவீதத்தைக் கூட இவர்களால் செய்ய முடியவில்லை.
அதற்குக் காரணம், இவர்கள் கையில் எடுத்த “எதிர்ப்பு அரசியல்” மற்றும் “துரோகிப் பிரசாரம்”. மக்களுக்குச் சேவை செய்வதை விட, சக தமிழ் அரசியல்வாதிகளைத் துரோகிகளாக்குவதிலேயே இவர்களது காலம் கழிந்துவிடுகிறது.
துரையப்பாவிடம் இருந்த தொலைநோக்குப் பார்வையும், மத்திய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்றுத் தரும் சாணக்கியத்தனமும் பின்வந்த எந்தத் தலைவரிடமும் இல்லை.
அல்பிரட் துரையப்பாவின் மரணம் என்பது வெறும் ஒரு தனிமனிதனின் கொலை அல்ல; அது யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மரணம்.
சுயநல அரசியல்வாதிகள் தங்கள் இலாபத்திற்காகத் தொடங்கிய “துரோகிப் பட்டம்” கட்டும் கலாச்சாரம், ஒரு சிறந்த தலைவனைப் பலிகொண்டதோடு மட்டுமல்லாமல், தமிழ் இளைஞர்களை வன்முறைப் பாதைக்கும் தள்ளியது.
அன்று தொடங்கிய அந்த மலின அரசியல் கலாச்சாரம், இன்றுவரை தமிழ்ச் சமூகத்தை ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையில் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை.
முகநூல்
![]()