மண்ணிலே இருந்துமே அகற்றிடல் மனிதமே!… ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கீரியும் பாம்புமாய் இருப்பது மேலல்ல
கிளியும் பழமுமாய் இருப்பது மேலாகும்
பருந்தாய் இருந்து விருந்தாய் கோழியை
கவர்ந்து மகிழ்வதை களைந்திட எண்ணுவோம் !
வண்ணத்து பூச்சிகள் மதுவுண்டு மலர்களில்
தந்திடும் காட்சியை மனமதில் இருத்துவோம்
புண்படும் எண்ணமாய் கணைகளை எறிவதை
மண்ணிலே இருந்துமே அகற்றிடல் மனிதமே !
தாவிடும் அணிலினை தடியினால் அடிப்பதும்
தளர்ந்திடும் மானினை கொன்றிட நினைப்பதும் ![]()
பால்தரும் பசுவை பதனிட்டு உண்பதும்
பழியொடு பாவத்தை பரிசெனத் தந்திடும் !
வீட்டிலே வளர்த்திடும் ஆட்டினைக் கொல்வதும்
விளையாடும் முயலை விரட்டியே வதைப்பதும்
பாட்டினை இசைக்கும் குயிலினை அடிப்பதும்
பாவியர் ஆக்கும் செய்லென உணர்வோம் !
மலர்ந்திடும் பூவை கசக்கிட நினைப்பதும்
கனிந்திடும் கனியை கல்லினால் அடிப்பதும்
நிழல்தரும் மரத்தை வெட்டியே சரிப்பதும்
நிலத்தினில் செய்வது நெறியினை அழித்திடும் !
![]()