தினமும் இருவர் வீதம் அரசியல் பழிவாங்கல்; வரலாற்றில் மோசமான ஆட்சி – விமல் வீரவன்ச

இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசு அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.
கொழும்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொந்தமாக வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளுடன் கூடிய உன்னதமான எதிர்காலம் ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் அவர்களுக்கு வெறும் 20 கிலோ அரிசியைக் கடனாக வழங்கும் அவல நிலையே நாட்டில் காணப்படுகிறது.
இந்த நாட்டின் அரச ஊழியர்களே பெருந்திரளாகத் திரண்டு சென்று தபால் மூலம் வாக்களித்து இந்த ஆட்சியை உருவாக்கப் பாரிய பங்களிப்பை வழங்கினார்கள்.ஆனால், இன்று அதே அரச ஊழியர்களை ‘திருடர்கள்’ என்று அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார்.
அரச ஊழியர்களை இவ்வளவு தூரம் அவமதிக்கும் மற்றும் பழிவாங்கும் ஒரு நிர்வாகம் இதற்கு முன்னர் இலங்கையில் இருந்ததில்லை. இது வரலாற்றிலேயே மிக மோசமானதொரு ஆட்சியாகும்.
தற்போதைய அரசிடம் நாட்டின் வளர்ச்சிக்கான எந்தவொரு முறையான பொருளாதாரத் திட்டமும் இல்லை. தினம் இருவரை என்ற கணக்கில் கைது செய்வது மட்டுமே இந்த அரசின் பிரதான வேலைத்திட்டமாக மாறியுள்ளது.
ஏதாவது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி, தினமும் இருவர் வீதம் அரசியல் பழிவாங்கல்களின் அடிப்படையில் கைது செய்து, அதன் மூலமே இந்த அரசு தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கின்றது என கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
![]()