மீண்டும் பிறந்த சுதந்திரம் : 12 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து நின்ற மாற்றுத்திறனாளி

கடந்த 12 ஆண்டுகளாக முடக்கப்பட்ட கால்களுடன் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வந்த லெபனான் நாட்டைச் சேர்ந்த ஜெசிகா டாவில் (Jessica Tawil) என்ற பெண், நவீன ரோபோடிக் கருவியின் உதவியுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எழுந்து நின்று நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில், தனது 16 வயதில் ஏற்பட்ட கோரக் கார் விபத்து ஒன்றில் ஜெசிகாவின் முதுகுத் தண்டுவடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் இயங்காமல் போனதால், அன்றிலிருந்து அவர் சக்கர நாற்காலியையே நம்பி வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில், ‘ஈவ்’ (Eve) எனப்படும் உடலோடு அணியக்கூடிய நவீன ரோபோடிக் கருவியின் (Wearable Robotic Exoskeleton) உதவியுடன் அவர் எழுந்து நின்று சில படிகள் எடுத்து வைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடந்த அடக்க முடியாத மகிழ்ச்சியில், உணர்ச்சிவசப்பட்டு “ஓ மை காட்!” என்று அவர் திரும்பத் திரும்பக் கூறிய அந்த உணர்ச்சிபூர்வமான தருணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ரோபோடிக் கருவி அவருக்கு முழுமையான உடல் நலனை அளித்துவிட்டதாக அர்த்தமல்ல என்றாலும், இயந்திர உதவியின் மூலம் அவர் சொந்தமாக எழுந்து நிற்கவும், சில படிகள் எடுத்து வைக்கவும் இந்த நவீன தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதியைப் பெற்ற இந்த ‘ஈவ்’ கருவி, மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கையில் புதிய சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் பெற உதவும் என்பதற்கு ஜெசிகாவின் இந்த அனுபவம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
![]()