பலதும் பத்தும்

“ஆண் ஆதிக்கத்தைக் கேலி செய்கிறேன்”

பிரித்தானியாவின் பிரபல மேடை நகைச்சுவைக் கலைஞர்   சோஃபி டுகர், மேடை அனுபவங்கள், ரசிகர்கள் அளித்த விசித்திரமான பரிசுகள் மற்றும் தனது புதிய புத்தகம் குறித்தும் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான நேர்காணல்:

கேள்வி: நகைச்சுவைத் துறைக்கு நீங்கள் ஏன் வந்தீர்கள்?
பதில்: “ஒரு விஷயத்தை நீங்கள் தீவிரமாக விரும்பினால், அதை அடைவதற்கான சிறந்த வழி: முழு முயற்சியையும் (110%) செலுத்தும் அதேவேளையில், அதுகுறித்து எவ்வித ஈடுபாடும் இல்லாதது போலக் காட்டுவதுதான்.

வாரத்தில் ஐந்து இரவுகள், சிறிய மதுபானக்கூடங்களில் இருந்துகொண்டு காலனித்துவம் பற்றியெல்லாம் விசித்திரமான நகைச்சுவைகளைப் பேசுவேன். இதையெல்லாம் ஒரு சாதாரண பொழுதுபோக்கு என்றும், எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம் என்றும் எனக்குள்ளேயே பொய் சொல்லிக்கொண்டுதான் இத்துறைக்குள் வந்தேன்.”

கேள்வி: உங்களின் மறக்க முடியாத சிறந்த மேடை நிகழ்ச்சி எது?
பதில்: “லெஸ்பியன் (Lesbian) சுற்றுலாப் படகில் நான் நிகழ்த்திய கலைநிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு கூடியிருந்த பல மூத்த பெண்களிடம் இருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தன.

நிகழ்ச்சி முடிந்ததும், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண் என் அருகே வந்து எனது முன்னோர்களைப் பற்றிப் பேசினார். இத்தகைய நெகிழ்ச்சியான அனுபவங்கள் வழக்கமான பெரிய மேடைகளில் கூட நமக்குக் கிடைக்காது.”

கேள்வி: மிகவும் மோசமான, ஆனால் இப்போது நினைத்தால் சிரிப்பை வரவழைக்கும் மேடை அனுபவம் ஏதேனும் உள்ளதா?

பதில்: “ஒரு மிகப்பெரிய திருவிழாவில் நான் முதன்மைப் பேச்சாளராகப் பங்கேற்றேன். நிகழ்ச்சி தொடங்கி 10 வினாடிகளிலேயே எனது ஆடை சற்று விலகிவிட்டது. எனது கம்பீரமான உரையாடலுக்குப் பாதிப்பு வந்துவிடும் என்பதால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை; பார்வையாளர்களும் தயக்கத்தினாலும் பயத்தினாலும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

அரை மணி நேரம் நிகழ்ச்சி முடிந்ததும், ‘அங்கு உண்மையில் அப்படி ஒன்று நடந்ததா?’ என்று அங்கிருந்த அனைவரும் சந்தேகப்படும் அளவுக்கு, நாங்கள் அனைவரும் அதை இயல்பாகக் கடந்துவிட்டோம்.”

கேள்வி: உங்களின் புதிய நிகழ்ச்சியான ‘ஹாட் பீஃப் இன்ஜெக்ஷன்’ (Hot Beef Injection) பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: “இது ஆண் ஆதிக்கத்தைக் கேலி செய்யும் ஒரு மணி நேரக் கோபமான, அதேசமயம் வேடிக்கையான நிகழ்ச்சி. எனது நிகழ்ச்சிகளுக்கு வரும் ஆண்களை எனக்கு மிகவும் பிடிக்கும்; ஆனால், வெளியே தெருக்களில் உலவும் ஆண்கள் தினசரி வாழ்க்கையில் அச்சுறுத்தலாகவே இருக்கிறார்கள்.

பாலியல் குற்றங்களும், கலாசாரச் சீரழிவுகளும் நிறைந்த உலகத்தில், நச்சுத்தன்மை வாய்ந்த ஆண் ஆதிக்க எதிர்ப்பைக் கையில்ெடுப்பது அவசியமாகிறது.”

கேள்வி: இந்த நிகழ்ச்சியைத் தொடங்க ஏதேனும் குறிப்பிட்ட சம்பவம் காரணமாக இருந்ததா?

பதில்: “ஆம்! நான் நகைச்சுவைத் துறைக்கு வந்த புதிதில், இத்துறையைச் சேர்ந்த ஒரு மூத்த நபரால் எனக்கு விரும்பத்தகாத ஒரு அனுபவம் ஏற்பட்டது. அப்போது அதை நான் பெரிதுபடுத்தாமல் கடந்துசென்றுவிட்டேன்.

ஆனால், 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் அவரது பாதை என் பாதையைக் குறுக்கிட்டது. ‘சுற்றி நிகழும் அனைத்து கசப்பான சம்பவங்களுக்கும் மத்தியில், இந்த அனுபவத்தையும் ஏன் ஒரு மேடை நகைச்சுவையாக மாற்றக்கூடாது?’ என்று யோசித்தேன். அதுவே எனது சிறந்த மேடை நிகழ்ச்சியாக மாறியது.”

கேள்வி: உங்களின் முதல் நாவலான ‘டாங்’ (Dong) விரைவில் வெளியாகவுள்ளது. புனைகதை எழுதுவதில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

பதில்: “நான் வாழ்நாள்முழுவதும் ஏதோ ஒருவகையில் கற்பனைகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஒரு முழுப் புத்தகத்தை எழுதி அதில் என் பெயரைப் பார்ப்பது என்பது எனக்கு எட்டாத கனவாகவே இருந்தது.

எழுத்தாளராக மாறும்போது கிடைக்கும் கற்பனைச் சுதந்திரம் போதை போன்றது. சலூனில் முடி திருத்தும்போதும், அதிகாலை வேளையிலும் கூட எனது மடிக்கணினியில் தொடர்ந்து எழுதி இந்த நாவலை உருவாக்கினேன்.”

கேள்வி: உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

பதில்: “’நிகழ்ச்சி நன்றாகப் போய்க்கொண்டிருந்தால் மேடையை விட்டு இறங்கு; நிகழ்ச்சி மோசமாகப் போய்க்கொண்டிருந்தாலும் மேடையை விட்டு இறங்கு.’

இதை ஒரு ஆண் நகைச்சுவைக் கலைஞர் எனக்குக் கூறினார். எந்தவொரு படைப்பும் பார்வையாளர்களின் ரசனையை விட, கலைஞனின் சுய பெருமைக்கானதாக மாறக்கூடாது என்பதை இது எனக்கு உணர்த்தியது. உங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செய்யுங்கள்; பின்னர் அமைதியாக விலகிவிடுங்கள்.”

கேள்வி: ரசிகர்களிடம் இருந்து கிடைத்த விசித்திரமான அனுபவம் எது?

பதில்: “எனது ரசிகர்களின் அன்பைப் வெளிப்படுத்தும் முறை மிகவும் விசித்திரமானது! யோர்க் நகரில் ஒரு நபர் எனக்குப் புதிதாகச் சுடச்சுடச் சுடப்பட்ட ரொட்டியைப் பரிசளித்தார் (நான் அதை ஏற்றுக்கொண்டேன்).

பிரான்ஸைச் சேர்ந்த ஒருவர் தனது கடன் அட்டை விவரங்களை எனக்குக் கொடுக்க முன்வந்தார் (நான் அதை நிராகரித்துவிட்டேன்). ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் தனது செல்லப் பிராணி நாயின் முடியைச் சிறிய அட்டையில் வைத்துப் பரிசளித்தார்.”

கேள்வி: உங்களின் மிகச் சிறந்த நகைச்சுவை என நீங்கள் நினைக்கும் ஒன்று, பார்வையாளர்களிடம் பலனளிக்காமல் போனது உண்டா?

பதில்: “என்னுடைய அனைத்துச் சிறந்த நகைச்சுவைகளும் பார்வையாளர்களைச் சென்றடைகின்றன. ஆனால், ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ (Lord of the Rings) போன்ற குறிப்பிட்ட புனைவுச் செய்திகளைச் சேர்க்கும்போது, சில நேரங்களில் பார்வையாளர்களின் வரவேற்பு சற்றே குறைவாக இருப்பதை நான் கவனிக்கிறேன்.”

கேள்வி: உங்களின் அடுத்தகட்ட திட்டம் என்ன?
பதில்: “முதுமைக்காலத்திலும் சுறுசுறுப்பாகவும், மனதளவிலும் உடலளவிலும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எனது 90 ஆவது வயதிலும் அறிவார்ந்த பெண்ணாக வளர வேண்டும்; மாதம் ஒருமுறை எனது நண்பர்களுக்கு விருந்தளித்துக் கொண்டாடும் அளவுக்கு ஆற்றலுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *