63 ஆண்டுகளாக அசைவம் சாப்பிடாத அதிசய கிராமம்! எங்குள்ளது தெரியுமா?

உணவுப் பழக்கம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் நிலையில், ஒரு கிராமமே ஒரே கொள்கையை ஏற்று, கடந்த 63 ஆண்டுகளாக அசைவ உணவை முற்றிலுமாகத் தவிர்த்து வாழ்ந்து வரும் விடயம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அமைந்துள்ள வாடிமனைப்பட்டி கிராமம்தான் இத்தகைய தனித்துவமான வாழ்க்கை முறையால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

1963-ல் தொடங்கிய மாற்றம்!
இந்தக் கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு காலத்தில் மற்ற கிராமங்களைப் போலவே சைவம், அசைவம் என அனைத்து வகையான உணவுகளையும் உட்கொண்டு வந்த இம்மக்கள், 1963-ம் ஆண்டு முதல் தங்களது உணவுப் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.
வள்ளலார் வலியுறுத்திய சுத்த சமரச சன்மார்க்க நெறியை முழுமையாக ஏற்றுக்கொண்ட இந்த கிராம மக்கள் , அன்றுமுதல் அசைவ உணவை முற்றிலுமாகக் கைவிட்டு சைவ வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர்.
இந்த முடிவு ஒரு சிலருடன் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த கிராமத்தின் வாழ்வியல் கொள்கையாகவே மாறியது தான் இதன் சிறப்பம்சம்.

பண்டிகை வந்தாலும் மாறாத கொள்கை!
பொதுவாகத் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உணவுப் பழக்கங்களில் பலரும் மாற்றங்களைச் செய்வது வழக்கம். ஆனால், வாடிமனைப்பட்டி மக்களுக்கு அத்தகைய மாற்றங்களுக்கு இடமில்லை. பண்டிகை நாட்களிலும், வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றாலும் சைவ உணவையே தேர்வு செய்கின்றனர்.
அதேபோல், வெளியூரிலிருந்து திருமணமாகி இந்தக் கிராமத்திற்கு வரும் பெண்களும், காலப்போக்கில் இங்குள்ள பாரம்பரியத்தையும் உணவுக் கலாசாரத்தையும் ஏற்றுக்கொண்டு சைவ வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகின்றனர்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான ஜெயமணி என்பவர் தனது வாழ்க்கை அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அவர், திருமணத்திற்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால், வாடிமனைப்பட்டியில் திருமணமாகி குடியேறிய பின்னர், தனது கணவரின் உணவுப் பழக்கத்தையும் கிராமத்தின் கொள்கையையும் ஏற்றுக்கொண்டு சைவத்திற்கு மாறியுள்ளார்.
தனது நான்கு மகள்களுக்கும் வெளியூர்களில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும், அவர்களும் குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து சைவ உணவையே கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்தக் கொள்கை எவ்வாறு கடத்தப்படுகிறது என்பது அறியப்படுகின்றது.

மீன்கள் நிறைந்த கண்மாய்… ஆனால் மீன்பிடிக்கத் தடை!
இந்தக் கிராமத்தின் தனித்துவம் உணவுப் பழக்கத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உயிர்களைக் கொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஆழமாகப் பதிந்துள்ளது.
ஆடு, கோழிகளை வளர்த்து விற்பனை செய்தால் அவை இறைச்சிக்காகப் பலியிடப்படலாம் என்பதால், கிராம மக்கள் அவற்றை வளர்ப்பதில்லை. பசுக்களை மட்டுமே வளர்த்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கிராமத்தின் கண்மாயில் ஏராளமான மீன்கள் இருந்தாலும் அவற்றைப் பிடிப்பதற்கோ உணவுக்காகப் பயன்படுத்துவதற்கோ மக்கள் முன்வருவதில்லை. உயிரினங்கள் மீதான அக்கறையை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல், தங்களது செயல்பாடுகளிலும் கடைப்பிடித்து வருகின்றனர்.
மதுவுக்கு இடமில்லாத கிராமம்! வாடிமனைப்பட்டியின் மற்றுமொரு சிறப்பம்சம், அங்கு மதுப்பழக்கம் இல்லாத வாழ்க்கை முறை நிலவுவதுதான். பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாரும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், வெளியூர்களிலிருந்து கிராமத்திற்கு வருபவர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பதிலும் இம்மக்கள் முன்னிலையில் உள்ளனர்.
ஊருக்கு வரும் விருந்தினர்கள் உணவருந்தாமல் திரும்பிச் செல்லக்கூடாது என்பதில் அவர்கள் அக்கறை காட்டுகின்றனர்.திருமண நிகழ்வுகளும் வள்ளலாரின் சன்மார்க்க நெறிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படுகின்றன.
ரசாயனமில்லா விவசாயம்
விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இக்கிராம மக்கள், இயற்கை சார்ந்த விவசாய முறைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தங்களது விளைநிலங்களில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் விளைபொருட்களின் இயற்கைத்தன்மையைப் பாதுகாப்பதுடன், பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முயற்சி செய்கின்றனர்.
வள்ளலாரின் கொள்கைகள் இந்தக் கிராம மக்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்களும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளன. வள்ளலாரின் மகாமந்திரமான ‘அருட்பெருஞ்ஜோதி’யை அடிப்படையாகக் கொண்டு, இங்கு பிறக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களையே பெற்றோர் சூட்டி வருகின்றனர்.
மேலும், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பசுக்களைக் குளிப்பாட்டி, அவற்றுக்குச் சிறப்பான உணவுகளை வழங்கிப் பராமரிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
காலமாற்றத்திற்கேற்ப உணவுப் பழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் வேகமாக மாறிவரும் இன்றைய சூழலில், 63 ஆண்டுகளாகத் தங்களது கொள்கையில் உறுதியாக இருந்து வரும் வாடிமனைப்பட்டி மக்களின் வாழ்க்கை முறை கேட்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
![]()
