Uncategorizedகதைகள்

அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும்…. சோலையூர் குருபரன்

சோலையூர் குருபரன்

இதுவும் கடந்து போகும்….

நம்மளத் தொட்ட துன்பம் நம்மள விட்டுப் போகுதில்லையே’ என ஏக்கப் பெருமூச்சுவிட்டு முகத்தில் வழிந்திருந்த வியர்வையைக் கையால் துடைத்துவிட்டு பிள்ளைகளின் உடுப்புக்களைத் துவைத்துக் கொண்டிருந்தாள் மாலதி. இவ்வாறு தனிமையில் இருந்து ஏதொ ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போதுதான் தனது துன்பம், துயரங்கள், ஏக்கம், எதிர்பார்பு என்பன அவளுக்கு வெளிப்படும்.
மாலதி சாதாரண குடும்பப் பெண். உயர்தரம் வரை கற்று குடும்பக் கஷ்டம் காரணமாகப் படிப்பை இடையில் நிறுத்தியவள். சுமாரான அழகும் பருவத்துக்குரிய துடுக்குத் தனங்களும் அவளிடம் இருந்தது. ‘

பாடசாலையில் பெரும்பாலானோர் செல்லமாக மாலு மாலு என்றே அழைப்பார்கள். விளையாட்டில் தேசிய மட்டம் வரை சென்று வந்திருக்கிறாள். படிப்பிலும் கெட்டிக்காரிதான். இருந்தும் என்ன செய்வது அவளின் வறுமை தடுத்துவிட்டது.
தான் படிக்கும்போது பாடசாலையில் சிற்றூழியராகப் பணியாற்றிய காந்தன் மாலதியை ஒருதலைப் பட்சமாகக் காதலித்து, பல நாள் அவளைப் பின் தொடர்ந்து, ஒரு சந்தர்ப்பம் பார்த்து தெருவில் வைத்துத் தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தி விட்டான். காந்தன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன்.

மாலதியைத் தீவிரமாகக் காதலித்துப் பல எதிர்ப்புகளுக்கு மத்தியி்ல் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு ஆணும் இரு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்துச் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். காந்தன் விடுமுறை நாட்களில் பிற தொழில்களும் செய்து வங்கியில் கடனும் எடுத்து, சீட்டும் பிடித்துக் காணி வாங்கிச் சிறிய கல்வீடு, இரண்டு ஏக்கர் ஒரு போகம் பயிர் செய்யக்கூடிய நெற்காணி பிள்ளைகளுக்கு நகைநட்டுக்கள் எனச் சேர்த்த வைத்திருந்தான்.
ஒரு நாள் பாடசாலைப் பணி நிமித்தம் வலயக் கல்வி அலுவலகத்துக்குச் செல்லும்போது ஏற்பட்ட மோசமான விபத்தொன்றில் படுகாயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாகிவிட்டான்.

அலுவலகப் பணி காரணமாகச் செல்லும் வழியில் சம்பவம் நிகழ்ந்தமையால் விசாரணையின் பின்னர் மாதச் சம்பளமும் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மனைவி, பிள்ளைகளின் உதவியை எதிர்பார்த்து விரக்தியோடு வாழ்கிறான்.
மாலதி அவனைக் கண்போல் பாதுகாத்து வருகிறாள். இடுப்புக்குக் கீழுள்ள உறுப்புக்கள் இயங்குவதில்லை. சக்கர நாற்காலியில் இருக்க முடிவதில்லை. அவனுக்கு மாலதியால் எந்தக் குறையும் இருந்ததில்லை. தனக்கு இவ்வாறு ஆகிப் படுத்த படுக்கையாகி விட்டேனே? பிள்ளைகளுக்கோ மாலதிக்கோ எதுவும் செய்ய முடியவில்லையே? நான் வாழ்ந்தும் பிரயோசனம் இல்லையே என்ற மனக்குறை அவனைத் தினமும் வாட்டி வதைக்கிறது. இருந்தும் தைரியத்தோடு இருக்கிறான். கணவனுக்கு மனக்குறை ஏற்படாத வகையில் இருப்பதைக் கொண்டு சமாளித்து வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறாள் மாலதி.

அழகும் வனப்பும் மிக்க பாரதிபுரம் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் மூன்றும் அக்கிராமத்தில் உள்ள பாடசாலையில் இடைநிலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் கல்விச் செலவு, ரியூசன், நாளாந்த வாழ்க்கைச் செலவு என்பதற்கெல்லாம் வரும் வருமானம் கட்டுப்படி ஆகவில்லை. காந்தனின் வைத்தியச் செலவு கட்டுக்கடங்காமல் காணி, நகைகளில் சில அடகுக்குச் சென்றுவிட்டன. ஏறிக் கிடக்கும் பொருட்களின் விலையினால் வாற வருமானத்தை வைத்துச் சமாளிக்க முடியாமல் போகும் போதுதான் இவ்வாறு பெருமூச்சுவிட்டு மனதைத் தேத்திக் கொள்வாள்.

கிராமத்தில் நடுவில் இருக்கும் இலுப்பை மரத்தில் அண்டங்காக்கை கூடுகட்டிக் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறது. மாலதியின் குடும்ப நிலவரம் அண்டங்காக்கைக்கு நன்கு தெரியும். மிஞ்சுகின்ற உணவு முழுவதையும் நாய், பூனை, கோழி, காகங்களுக்குக் கொடுத்து மகிழ்வாள். அதனால் மூன்று வேளையும் அண்டங்காக்கை மாலதியின் வீட்டை நாடி வருவது வழக்கம்.

காந்தனுக்கு உடம்பு முடியாமல் இடைக்கிடையே பிட்ச் வரும். மாலதி பதறிப் போய்விடுவாள். காலை 9.30 மணி இருக்கும் காந்தன் உடம்பு முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். யொசனையில் தன்னை மறந்து கை போன போக்கில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள் மாலதி. பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றிருந்தன. வீட்டுக்குள் அனுகல் சத்தம். காந்தனுடையது. சுயநிலைக்கு வந்த மாலதி அனுகல் சத்தம் கேட்டு “ஐயோ! தெய்வமே!” என அழுது கொண்டு ஓடுகிறாள். அவனைப்பார்த்ததும் பிரமை பிடித்தவள் போலாகிவிட்டாள். திகைத்துப்போய் செய்வதறியாது ஒரு கணம் நின்றவள் சுயநிலைக்கு வந்து “ஐயோ பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாரே. என்ன செய்வேன். ஒரு நாளும் இப்படி நடக்கல்லயே? என்ன செய்வேன் கடவுளே” என அருகில் சென்று “அப்பா! அப்பா! கண்ணத் திறவுங்கோ? என்ன நடந்தது? எழும்புங்கோ” உடம்பை அசைத்துப் பார்த்தாள். தண்ணீர் கொண்டு வந்து தெளிக்கிறாள். ஒரு பிரதிபலிப்பும் இல்லாது கிடக்கிறான். “ஐயோ! ஐயோ!” என்று தலையில் அடித்து அழுகிறாள். வெளியே வந்து வேலி ஓரமாகச் சென்கு “கமலாக்கா கமலாக்கா கொஞசம் ஓடிவாங்கோ” “என்னடி மாலதி என்னவோ மாதிரி இருக்காய். ஏதும் பிரக்கினையோ? என்றதும் வீட்டுக்குள்ளே இருந்த கமாலாவின் கணவர் சந்திரன் “என்ன? என்ன?” எனக் கேட்டவாறு வெளியே வந்தார்.

மாலதி நிலைமையைக் கூறியதும், சந்திரன் முச்சக்கர வண்டி ஒன்றை வரச் சொன்னான். அதுவும் வந்துவிட்டது. காந்தனைச் சாரதியும் சந்திரனுமாக ஏற்றிச் சந்திரனும் அமர்ந்து கொணடான். “கமலாக்கா பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வருவாங்க, இதப்பத்தி ஏதும் சொல்லாதீங்கோ. பயந்து போகுங்கள். எதையாவது சொ்லிச் சமாளிச்சிப் பாத்துக் கொள்ளுங்கோ” என அழுதவாறு வண்டியில் ஏறி அவளும் சென்றுவிட்டாள். இத்தனையையும் மாமரக் கிளையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அண்டங்காக்கை கண் கலங்கி அழுதுவிட்டது. ‘பாவம் மாலதி அக்காவுக்கு இத்தனை சோதனையா’ என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கீழே சிந்திக் கிடந்த உணவுப் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டு குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பதற்காகக் கூட்டை நோக்கிப் பறந்து சென்றது.

குஞ்சிகளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு சிந்தனையோடு பறந்து சென்று இலுப்பை மரத்தின் உயரமான கிளை ஒன்றல் சோகத்துடன் அமர்ந்திருந்தது. ஊர்க்குருவியும் வரும் நேரமாகிவிட்டது. ஆகாயத்தில் வேகமாகப் பந்து கொண்டிருந்த ஊர்க்குருவி அண்டங்காக்கையைக் கண்டதும் தாழப் பறந்து வந்து அருகில் அமர்ந்து கொண்டது.

“அக்கா மெய்மறந்து வந்ததும் தெரியாம இரிக்கீங்க ஏதும் ஆபத்துக் கீபத்தோ! என்னெண்டு சொல்லுங்கோ” என்று காக்கையின் சிந்தனையைக் கலைத்தது. “கவலையா இருக்கிடா தம்பி. நம்ம மாலதி அக்காவத் தெரியுந்தானே? ஓதுக்கி வச்ச ரெண்டு குடும்பத்துட உறவும் இல்ல. மூண்டு பிள்ளயள். காந்தன் அண்ணாவால் எழும்பி நடக்கவும் ஏலாது. படுத்த படுக்கை. ஏழெட்டு வருசமா என்ன கஷ்டப்படுது. இண்டைக்கு நடந்ததப் பாத்து நானே கண் கலங்கி அழுதிட்டன்” என்றதும் “என்னக்கா நடந்தது” என்றது ஊர்க்குருவி.

“தம்பி காந்தன் அண்ணாவுக்குப் பேச்சு மூச்சில்லாம ஆசுபத்திரிக்கு ஏத்திததுப் போனாங்க. ஏதோ பிட்சாம், தண்டுவடம் முறிஞ்சாக்களுக்கு இது வருமாம் எண்டெல்லாம் சொல்லுறாங்க. அக்கம் பக்கத்து உதவியும் இல்லயெண்டா அக்கா தனிச்சுப் போயிடும்” “அக்கா , காந்தன் அண்ணாவின் இயலாம ஒரு புறம். கஸ்டம் ஒரு புறம் எப்படியெல்லாம் கஷ்டப்படுறா. ரெண்டு மூண்டு வருசமா அங்கதான் கூடுகட்டி இருந்தன். இப்போதும் அடிக்கடி போய் வாறனான். அக்கா படுற கஷ்டமெல்லாம் தெரியும். நானும் அழுதிருக்கன். விலைவாசி அதிகரிப்பு. மருந்து, வைத்தியச் செலவெண்டு எவ்வளவு கஷ்டப்படுறா” என்று ஊர்க்குருவி கூறியதும் இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது.

“அக்கா இப்ப சனங்கள் படுற கஷ்டத்தச் சொல்ல முடியல்ல. சனங்களுக்கு வருமானமும் கொறஞ்சி வில ஏத்தத்தாலயும் கட்டண அதிகரிப்பாலயும் கிடந்து கஷ்டப்படுதுகள். நிறையப் பேரின்ட மின்சாரத்த நிறுத்திப் போட்டாங்க. கடன் அது, இதெண்டு திண்டாடுதுகள். பல புள்ளைகள் பள்ளிக்குப் போகாம நிக்குதுகளாம். சமூகத்துக்குள்ள எவ்வளவு பிரச்சின நடக்குது. வீடுகள்ல அரவாசிப் பிரச்சினை பேஸ்புக் இது இதெண்டு தொல்லை பேசியாலதான் நடக்குதாம். பல புள்ளைகள் சொல்லுக் கேக்குதில்லையாம் எனப் பல பெற்றார் பலம்புறதும் தெரியுது. அக்கா காலம் கெட்டுக் கிடக்குது. எல்லமீறிப் போகுதாம் எண்டும் சொல்றாங்க. மாலதி அக்காவுக்காகப் பிராத்திப்போம். நானும் போக வேணும். சரி அக்கா நான் போயித்து வாறன்” என்று பெருமூச்சுவிட்டு தன் அலகுகளால் சிறிய இறகினை நிவிவிட்டுச் சிறகடித்துப் பறந்து சென்றது ஊர்க்குருவி.

ஊர்க்குருவியுடன் அளவளாவியதால் மனப்பாரமும் கவலையும் குறைந்து இறகுகளை நீவிவிட்டு உணவு தேடப் பறந்து சென்றது அண்டங்காக்கை. ஊர்க்குருவியும் உயரப் பறந்து வானவெளியில் கலந்துவிட்டது.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட காந்தனின் உடல்நிலை பற்றி அறிவதற்காக மாலதியும் சந்திரனும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னால் காத்து நின்றனர். சற்று நேரத்தின் பின்னர் தாதி ஒருத்தி வந்து “அவருக்கு பிட்சுடன் காட் அட்டாக்கும் சேர்த்து வந்திருக்கிறது. நீங்க டைமுக்குக் கொண்டு வந்தத்தால உயிர் தப்பித்தாரு. இரண்டு நாள் ஒப்சவேசனில் வைத்துப் பார்த்துத்தான் வீட்டுக்கு அனுப்பலாமெண்டு டொக்கடர் சொல்லித்துப் போறாரு. கவனமாகப் பாத்துக் கொள்ளுங்கோ. அவருடன் ஒரு ஆள் நிற்க வேண்டும். இப்ப போய்ப் பாருங்க மயக்கத்தில் இருக்கிறார்” இருவரும் பார்த்துவிட்டு வெளியே வந்தனர். சந்திரன் இரு நாளும் காந்தனுடன் நிற்பதாகக் கூறியதும். கைகூப்பி அவனை வணங்குகினாள். ‘இதுவும் கடந்து போகும்’ என மனதை ஆசுவாசப்படுத்திப் பெருமூச்சு விட்டு முந்தானைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தாள்.

களம் தொடரும்…..

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *