கட்டுரைகள்

அரசியல் பத்தித்தொடர்…. சொல்-55 … சொல்லித்தான் ஆகவேண்டும்…. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

தம்பியப்பா

புலிகளின் போராட்டம் பெற்றுத் தந்தது என்ன???

சொல்லித்தான் ஆக வேண்டும்
அரசியல் பத்தித் தொடரின்
கடந்த பத்தியைப் ( சொல்-54) படித்த அன்பர் ஒருவர்
பின்வருமாறு பின்னூட்டப் பதிவொன்றை இட்டிருந்தார்.

“அமிர்தலிங்கத்திற்குப் பிறகு இன்றுவரை தமிழ் மக்களுக்குச் சரியான அரசியல் தலைமை உருவாகவில்லை. அமிர்தலிங்கமும் பத்மநாபாவும் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமைகளும் இல்லை. இரண்டு பேரையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. ஏன் புலிகள் அமிர்தலிங்கத்தை கொன்றார்கள் என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற இயக்கங்களை அழிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது. ஏனெனில் அவர்கள் மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடித்து வந்தனர். கடைசி நாட்களில் புலிகளும் அதைத்தான் செய்தார்கள். அதை வேறு ஒரு பதிவில் பார்க்கலாம். புலிகளின் அழிவிற்குக் காரணம் சரியான அரசியல் தலைமை இல்லாமைதான். அவர்களால் 9/11 பின்னர் உருவான உலக அரசியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இராணுவ ரீதியில் புலிகளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை”.
இவ்வாறு அவரது பதிவு அமைந்திருந்தது. இப்பதிவிற்கான எனது பதிலே-பிரதிபலிப்பே இம்முறைப் பத்தி (பத்தி-55) ஆகும்.

வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் கூட்டணித்தலைவரும், 'செயலாளர் நாயகமு'மான அ. அமிர்தலிங்கம் நினைவு தினம் ஜூலை 13

அமிர்தலிங்கத்தின் மீது வைக்கப்படக்கூடிய அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் ‘அமிர்தலிங்கத்திற்குப் பிறகு இன்றுவரை தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தலைமை உருவாக இல்லை’ என்பதை அந்த அன்பர் அவராகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்.

*இரண்டு பேரையும் (அமிர்தலிங்கத்தையும் பத்மநாபையும்) ஒரே தட்டில் வைக்க முடியாது’தான். அமிர்தலிங்கம் அஹிம்சை வழி அரசியலுக்கு ஊடாகப் பயணித்து வலது சாரி அரசியல் மனப்போக்குடன் மேலெழுந்த ஒரு மிதவாத அரசியல் தலைவர். பத்மநாபா உலகளாவிய இடதுசாரி அரசியல் சித்தாந்தங்களை வரித்துக் கொண்ட-புரட்சிகரமான-முற்போக்கான அரசியல் செயல்பாடுகளின் ஊடாக ஓர் ஆயுதப் போராட்டத்தை வழிநடாத்திய மக்கள் தலைவன். உலகளாவிய ரீதியில் ஒடுக்கப்பட்ட-அடக்கப்பட்ட-விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை யாசித்த பத்மநாபா இலங்கையில் பௌத்த-சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறைக்கு உள்ளான தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டார் என்பதே அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். எனவே ‘இரண்டு பேரையும் (அமிர்தலிங்கத்தையும் பத்மநாபாவையும்) ஒரே தட்டில் வைக்க முடியாது’ என்னும் அன்பரின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
*’ஏன் அமிர்தலிங்கத்தைப் புலிகள் கொன்றார்கள் என்பதை என்னால் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியவில்லை’ என்னும் அன்பரின் கேள்விக்கு விவரமாகப் பதிலளிக்க வேண்டியுள்ளது.

பத்மநாபா: ஆயுத வகிபாகம் ……..? அரசியல் வகிபாகம்…..? – Sooddram

தன்னிடம் மட்டுமே அதுவும் தான் விரும்புகிற மாதிரி அதிகாரம் ஒப்படைக்கப்படாத எந்த அரசியல் தீர்வையும் பிரபாகரன் விரும்பவில்லை. தான் மட்டுமே களத்தில் நின்று போரிட்டுப் பெறக்கூடிய தமிழீழத் தனி நாடு மூலம் மட்டும்தான் அத்தகைய அதிகாரம் தன் கை வசப்படும் என்பதில் பிரபாகரன் பிடிவாதமாக – வெறியாக இருந்தார். இங்கே மக்கள் நலன் என்பது பிரபாகரனைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம்தான். தன் கையில் மட்டுமே அதிகாரம் என்பதுதான் பிரபாகரனின் முன்னுரிமை.

இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் அமுலாகி அதன் மூலம் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக் கூடிய அதிகாரப் பகிர்வுத் தீர்வும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அதிகாரப் பகிர்வு கிட்டுமானால், அதனால் ஏற்படக்கூடிய ஜனநாயகச் சூழலில் தான் முழுக்க முழுக்க ஆயுதமுனையில் வைத்திருக்கும் அதிகாரம் கைநழுவிப் போய்விடுவதை பிரபாகரன் விரும்பவில்லை.

ஜனாதிபதி பிரேமதாசாவைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்களுடைய இனப் பிரச்சனைத் தீர்வில் இந்தியாவின் தலையீட்டை எப்போதுமே நிராகரித்தவர். தமிழ் மக்களுக்கு எதிரான 1977 ஆம் ஆண்டின் இனக் கலவரத்தையும் 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரத்தையும் அப்போது ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா அரசாங்கத்தின் அனுசரணையுடன் திட்டமிட்டு நிறைவேற்றியதில் பிரேமதாசாவுக்கும் பெரும் பங்கிருந்தது. இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அது கைச்சாத்திடப்பெற்றபோதே பிரதமர் பதவியிலிருந்துகொண்டு எதிர்த்து நின்ற பிரேமதாசாவுக்கு 1988 இறுதிப் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் சிங்கள மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாயிருந்த இந்திய அமைதிகாக்கும் படையை வெளியேற்ற வேண்டிய தேவை இருந்தது. இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதிலும் அவருக்கு அக்கறையிருக்கவில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அன்றிருந்த பூகோள அரசியல் காரணிகளால் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் அமுல் செய்யப்பெற்று அதனால் இந்து சமுத்திரப் பிராந்திய அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு மேலெழும்புவதையோ இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கு நிலைபெறுவதையோ உள்ளூர விரும்பவில்லை.

இந்தப் பின்னணியில் ‘Birds of the same feather flocks together’ என்பதற்கிணங்க மேற்கூறப்பெற்ற பிரபாகரன்+பிரேமதாசா+அமெரிக்கா மூன்றினதும் நலன்கள் ஒரு புள்ளியில் இணைந்ததால் பிரபாகரன் அமெரிக்காவின் ‘கைப்பொம்மை’யாகவும் பிரேமதாசவின் ‘கைத்தடி’யாகவும் மாறினார். அதன் மூலம் அமெரிக்காவிடமிருந்தும் பிரேமதாசாவிடமிருந்தும் ஏராளமான பணமும் ஆயுதங்களும் இந்திய அமைதிகாக்கும் படையினருடன் போர் தொடுப்பதற்காகப் பிரபாகரனுக்குக் கிடைத்தன. சுருங்கச் சொன்னால் பிரபாகரன் தன்னுடைய சுய தேவைக்காகத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒரு ‘கூலிப்படை’யாக (Mercenary ) மாற்றினார்.

இந்தியாவை இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியாகக் கருதி இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை உறுதியுடன் ஆதரித்தமைக்காகவே அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்டார். அமிர்தலிங்கத்தின் கொலை மரணம் பிரேமதாசா+பிரபாகரனின் ஒரு கூட்டுச்சதியாகும். தனது கருத்துக்கு-நிலைப்பாட்டுக்கு எதிரானவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுவது பிரபாகரனின் புலிகளின் ‘பாசிச’க் கொள்கையாகும்.

* ‘மற்ற இயக்கங்களை அழிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது. ஏனெனில் அவர்கள் (மற்ற இயக்கங்கள்) மக்கள் விரோத போக்கைக் கடைபிடித்து வந்தனர்’ என்பதன் மூலம் இந்த அன்பர் ‘சீரியஸ்’ ஆன ஒரு விடயத்தை மிக இலேசாக கடந்து போகிறார்.

அன்பர் கூறுவது போல் மற்ற இயக்கங்கள் மக்கள் விரோத போக்கைக் கடைபிடித்து வந்தனர் எனும் கூற்றை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும்கூட அந்த இயக்கங்களை அழிப்பதற்கான அதிகாரத்தைப் புலிகளின் கையில் யார் கொடுத்தார்கள்? மற்றைய இயக்கங்கள் மக்கள் விரோத போக்கைக் கடைபிடித்து வந்தனர் என்றால் அதனை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்தானே. தாங்கள் மட்டும்தான் புனிதமானவர்கள் என்ற புலிகளின் ‘கற்பிதம்’ ஏற்றுக்கொள்ளக்கூடிய இயற்கை நீதி அல்ல.

தாங்கள் மட்டுமே அதிகாரம் பெறுவதற்கு மற்றைய இயக்கங்களை அழிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்திருக்கலாம். அது மட்டுமல்ல, புலிகள் இயக்கத்திற்குள்ளேயே இன்னுமொரு தகுதியான தலைவர் உருவாவதைக்கூட பிரபாகரன் விரும்பவில்லை. அவர்களையும் அழித்தொழிக்க வேண்டிய தேவையும் பிரபாகரனுக்கு இருந்தது. ஆனால் இவை மக்களின் தேவையல்ல.

தமது கருத்துக்கு உடன்படாதவர்கள் மீதான தனிநபர் கொலைகளையும் சகோதர இயக்கப் படுகொலைகளையும் ஆரம்பித்து வைத்தவர்கள் புலிகளே என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.

*புலிகளின் அழிவிற்குக் காரணம் சரியான அரசியல் தலைமை இல்லாமைதான்’ என அவர் ஒப்புக் கொள்கிறார். ஆம்! அரசியல் இல்லாத இராணுவச் செயற்பாடுகளைத்தான் புலிகள் தமது வழிமுறையாகக் கொண்டிருந்தனர்.
*அவர்களால் (புலிகளால்) 9/11 பின்னர் உருவான உலக அரசியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை’ என்கிறார்.முடியவில்லை என்பதை விடப் புரிந்து கொள்ள மறுத்தார்கள் என்பதே பொருத்தம்.

*அன்பர் தனது பதிவை ‘இராணுவ ரீதியில் புலிகளுக்கு நிகரானவர்கள் இல்லை’ என்ற கூற்றுடன் நிறைவு செய்கிறார்.

புலிகள் இராணுவ ரீதியாக வல்லமை படைத்தவர்கள்தான். அது இறுதியில் மக்களுக்கு எதனைப் பெற்றுத் தந்தது?

விவேகம் இல்லை என்றால் வீரம் விலை போகாது. பிரபாகரனின் தன்முனைப்பு உளவியலும்-ஆயுத மற்றும் அதிகார மோகமும்-வன்முறை அரசியலும்-அறம் சாராத செயல்பாடுகளும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலுள்ள நியாயங்களை மேலெழும்ப முடியாமல் தடுத்து நேச சக்திகளைக்கூட எதிரியாக மாற்றி இறுதியில் அழிவுகளையே அறுவடையாகத் தந்தது என்பதுதான் முள்ளிவாய்க்கால் வரை முடிந்துள்ள வரலாறு தரும் அனுபவப் பாடமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *