கவிதைகள்

வாருங்கள் அனைவருமே மால்மருகன் தேர்பார்ப்போம் … கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
          மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
                  மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 
தேரோட்டம் என்றால் திரண்டிடுவார் மக்களெலாம்
ஊர்கூடித் தேரிழுத்தல் உவப்பான செயலாகும்
நல்லைநகர் கந்தன் தேரேறி வருகின்றான்
எல்லோரும் வாருங்கள் இழுத்திடுவோம்  கந்தன்தேர்
 
வெண்மணல் மீதினிலே கந்தன்தேர் அசைந்து வரும்
மெய்மறந்து அடியார்கள் கைகூப்பி நின்றிடுவார்
ஐயனே முருகையா ஆறுதலைத் தந்திடடென
அகமார அனைவருமே வேண்டியே அங்குநிற்பார்
 
அப்பப்பா அம்மம்மா அருள்முருகன் தேர்பார்க்க
பெத்தபிள்ளை பேரப்பிள்ளை கூட்டியே வருவார்கள்
வயது தளர்ந்தாலும் இளமையை நினைத்தபடி
அப்பப்பா அம்மம்மா ஆனந்தம் அடைந்திடுவார்
 
காவடிகள் ஆடிவரும் காட்சியது நல்லூரில்
கண்கொள்ளாக் காட்சியாய் களிப்பாக எழுந்துவிடும்
தேரிழுக்க முன்னாலா தேங்காய்கள் பலவுடைக்கும்
உணர்ச்சிமிகு அடியார்கள் உற்சாகம் உச்சந்தொடும்
 
வேதவொலி நாதவொலி விண்ணினைத் தொட்டுவிட
காலைக் கதிரவனின் கதிர்பட்டு ஒளிர்ந்துவிட
நல்லூரின் நாயகன் நம்பினார்க்கு நன்மருந்து
ஆறுமுகப் பெருமான் தேரேற வந்திடுவார்
 
வடம்பிடிக்க ஆசையுடன் அடியார்கள் திரள்வார்கள்
வடந்தொட்டு விட்டுவிட்டாலே மாசுபோனதாய் நினைப்பர்
அரோகரா ஒலியெழும்ப அருட்குமரன் தேரசையும்
அனைவரது கண்களுமே அறுமுகத்தான் மேலிருக்கும் 
வானொலி வர்ணனை வடிவேலன்  அருளுரைக்கும்
வடிவழகன் தேரோட்டம் தொலைக்காட்சி காட்டிநிற்கும்
வாராது இருப்பாரும் வேலவனின் தேர் பார்க்க
விஞ்ஞான சாதனங்கள் விருப்புடனே செயலாற்றும் 
 
சொர்க்கமாய் நல்லூர்  ஜொலித்துமே நிற்கும்
சொக்கவைக்கும் அழகோடு வேலவன்தேர் வீதிவரும்
வாருங்கள் அனைவருமே மால்மருகன் தேர்பார்ப்போம்
வருவினைகள் பறந்தோடும் வாழ்வு வளமாகிவிடும்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *