கவிதைகள்
“சினமென்னும் தீயதனை தீண்டாது இருப்போம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

மதங்கொண்ட யானை பாகனையே கொல்லும்
சினங்கொண்ட வேங்கை கண்டதையும் கொல்லும்
மனங்கொள்ளும் சினத்தால் மற்றவரை அழிப்போம்
சினமென்னும் நெருப்பைத் தீண்டினால் அழிவே
சினமேறி நின்றால் அசுரராய் ஆவோம்
சினமகற்றி நின்றால் தேவராய் ஆவோம்
நலனழிக்கும் சினத்தை விட்டொழித்து விட்டால்
நாடெலாம் செழிக்கும் நல்லன மலரும்
சினமதனைத் தீயென்று செப்புகிறார் வள்ளுவர்
தீபட்ட இடமெல்லாம் அழிந்துமே போகும்
தீயதனை அணைப்பதற்கு யாருமே விரும்பார்
தீயான சினமதனை அணைத்துவிடல் முறையா
இதிகாச புராணங்கள் எல்லோர்க்கும் பாடம்
சினத்தீயால் வந்தவற்றை செப்புவதைக் கதையாய்
ஏளனமும் விமர்சனமும் இல்லாமல் பார்த்தால்
எல்லோரும் விளங்கிடலாம் சினத்தீயின் அழிவை
நூறாண்டு யுத்தம் நடந்தது எதனால்
உலகப்போர் உருவாகி உலகழிந்த தெதனால்
மதங்கொண்ட சினத்தால் இனங்கொண்ட சினத்தால்
இன்னுமே அழிவுகள் தொடருவது முறையா
வாழ்வாங்கு வாழவே வந்தோமா நாங்கள்
வதைத்துமே அழிக்கவே வந்தோமா மண்ணில்
சிந்திப்போம் கட்டாயம் சிந்திப்போம் நாங்கள்
சினமென்னும் தீயதனை தீண்டாது இருப்போம் !
![]()