கவிதைகள்

“இடருக்கு மேலிடர்கள் எமைநோக்கி வருகிறது” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
     மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா.
 
அலைகடல் ஆர்ப்பரித்தால் அனைத்தையும் அழித்து விடும் 
அடைமழை பெய்துவிட்டால் அடித்துக்கொண்டே போய்விடும்
இடிமின்னல் வந்துவிட்டால் எத்தனையோ நடந்திடலாம்
இயற்கையது சீற்றத்தை எல்லோரும் அறிந்திடுவோம்
 
காட்டை அழித்தோம் கடலையும் விட  வில்லை 
ஆற்றை மறித்தோம் அணைகளைக் கட்டினோம்
மண்ணையும் விடவில்லை விண்ணையும் விடவில்லை
கண்பட்ட  இடமெல்லாம் காசாக்கி நின்றோம்
 
வானுயர்ந்த் கட்டிடங்கள்  மலைமீதும் மாடிகள்
மண்ணுக்குள் சுரங்கம் தோண்டுகிறோம் தோண்டுகிறோம்
விஞ்ஞானம் எனும்விருட்சம் வியாபித்து வளர்ந்து
இயற்கைக்கு எதிராக எத்தனையோ செய்கிறது 
 
ஆளில்லா விமானம் ஆளில்லா ஏவு கணை
சாரதியே இல்லாமல் தரையோடும் வாகனங்கள்
ஆருமே இல்லாமல் தானியங்கும் றோபோக்கள்
அத்தனையும் இயற்கையை அழிப்பதனை அறிகிலோம்
 
எதிர்பாரா வேளையில் வெள்ளம் வருகிறது
எதிர்பாரா வேளையில் மலையிடிந்து வீழ்கிறது
பூகம்பம் வருகிறது பொங்கிக்கடல் எழுகிறது
தேடியவை திரட்டியவை காணாமல் போகிறது
 
மாண்புடைய மனிதவுயிர் மரணத்துள் வீழ்கிறது
மாடிமனை கோடிசெல்வம் புதையுண்டு போகிறது
இயற்கையின் சமநிலையை இழக்கும்படி செய்வதால்
இடருக்கு மேலிடர்கள் எமைநோக்கி வருகிறது  !
 
 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button