செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஆயுதத் தாக்குதல்; செங்கடலை கைப்பற்ற ஈரான் முயற்சியா?

ஏமன் அருகே செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தக சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் வர்த்தகத்தின் முக்கிய பாதையாகக் கருதப்படும் செங்கடல் பகுதியில், ஆயுதங்களுடன் வந்த குழுவொன்று கப்பலை முற்றுகையிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, கப்பலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதமேந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தற்காப்பு நடவடிக்கையாக பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் செங்கடல் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்கான பொறுப்பை இதுவரை எந்த அமைப்பும் ஏற்கவில்லை.
கடந்த வாரம் ஏமனின் துறைமுக நகரமான பால்காபிற்கு தென்கிழக்கே பயணித்த மற்றொரு சரக்கு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அந்தச் சம்பவத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் தொடர்புடையிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
எனினும், 2023ஆம் ஆண்டு இறுதியில் இருந்து ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்த தாக்குதலிலும் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()