நீர்கொழும்பு பல்லன்சேனை திறந்தவெளிச் சிறையில் தொடர்ந்தும் கைதிகள் குழப்பம்; வெளியே கற்களை வீசி எறியும் இளம் குற்றவாளிகள்

நீர்கொழும்பு, தளுபொத – பல்லன்சேனை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த திறந்தவெளிச் சிறைச்சாலையில் சிறைக்கைதிகளிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை(7) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, சில கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மேலும் பலர் பிரதான நுழைவாயில் முன்பாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தச் சிறைச்சாலையில் 1,926 விளக்கமறியல் கைதிகளும், 213 தண்டனை பெற்ற கைதிகளுமாக மொத்தம் 2,139 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு அடிப்படை வசதிகள் போதியளவில் வழங்கப்படுவதில்லை என்றும், வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் உரிய நேரத்திற்கு அனுப்பப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியே கைதிகள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிறைச்சாலையின் உள்பகுதியிலிருந்து கற்களை வீசி எறிந்து வருகின்றனர்.
இதனையடுத்து, பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் தூர இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()