முச்சந்தி

யாழ் போதனா மருத்துவமனை விரிவாக்கம் தற்காலிக இடமாற்றம் குறித்து ஆளுநர் தலைமையில் விசேட ஆலோசனை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில்   நடைபெற்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் இயங்கி வருகிறது. போதனா மருத்துவமனையில் தரைமட்டத்திலுள்ள சில பழமையான கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகள் நிறைவடைய மூன்று ஆண்டுகள் செல்லும் என்பதால், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர வேண்டிய சிகிச்சைப் பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும், அதற்கான ஒப்பந்தம் தயாரிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கமைவாக, தற்போது மாகாண சபைக்குச் சொந்தமான அக் கட்டடத்தில் இயங்கிவரும் சுதேச வைத்தியத்துறை திணைக்களம், திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திப்பகுதியில் அமைந்துள்ள கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம்), யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button