இலங்கை

மகிந்தவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது; யாழில் அமைச்சர் ஆனந்த விஜேபால

தற்போது முன்னெடுக்கப்படும் கடந்த கால இலஞ்ச, ஊழல், மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான விசாரணைகள் வேகமாக முன்னெடுக்கப்படும் நேரத்தில் அதற்கு பயந்தே மகிந்த ராஜபக்‌ஷ போன்றோர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்குமாறு கோருகின்றனர் என்றும், ஆனால் சந்தர்ப்பவாத மற்றும் அதிகார ஆசையுள்ள அரசியல்வாதிகளுக்கு மீண்டும் ஒருபோதும் ஆட்சி அதிகாரம் கிடைக்காது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்களால் தோற்கடிக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள் மற்றும் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிகள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்திகள் இருந்தன. இந்நிலையில் மக்களால் அவர்கள் தேர்தலில் மட்டுமன்றி வீதிக்கு இறங்கி விரட்டியடிக்கப்பட்டனர். அவ்வாறான அரசியல்வாதிகள் மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய அதிகாரத்தை கேட்கின்றனர். நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் அவர்கள். இதனை உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்து ராஜபக்‌ஷக்கள் தொடர்புபட்டுள்ளனர் என்பதனை கூறியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் அடுத்த சுழற்சியில் வந்து நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை கோருகின்றனர். கடந்த 76 வருடங்களுக்கும் மேலாக தட்டுகளை மாற்றுவது போன்று நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகள் இப்போது மீண்டும் கனவில் இருந்து எழுந்தவர்கள் போன்று மக்களை திசை திருப்பி கூறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது செயற்படும் இலஞ்ச, ஊழல், மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிரான விசாரணைகள் வேகமாக முன்னெடுக்கப்படும் நேரத்தில் அதற்கு பயந்தே அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். இதனை விடுத்து சாதகமான வேலைத் திட்டங்கள் எதுவும் கிடையாது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பவாத, அதிகார ஆசையுள்ள அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மக்களின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள எந்த வாய்ப்பும் கிடையாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button