இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் தீவிரம் ; ஈரான் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பின்னணியில், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களால் ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதுடன், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.
விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஈரானுக்கு ஆதரவு வழங்கும் வகையில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் நிலவி வருகிறது. லெபனான் தலைநகர் பெரூட்டின் தயியா பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேலின் வடக்கு கிர்யட் ஷமொனா நகரை குறிவைத்து ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், இவை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, லெபனானில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகளையும் ஹிஸ்புல்லா குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
![]()