ஈழத்தமிழரின் உரிமைக்குரல் பாரதிராஜா; அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அஞ்சலி

தமிழ்த் திரைப்பட உலகின் இயக்குநர் இமயமாக போற்றப்படும் பாரதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கும் உலகத் தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். தனது திரைப்படப் படைப்புகளால் தமிழ் சினிமாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாது, சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் துணிவுடன் குரல் கொடுத்தவர் அவர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் உலகத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
ஈழத்தமிழர்கள் பல தசாப்தங்களாக எதிர்கொண்ட இனஅடக்குமுறை, போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து தமிழகத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிய முக்கிய கலைஞர்களில் பாரதிராஜாவும் ஒருவர். ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாட்டின் மையமாக இருந்தது. “எங்கிருந்தாலும் தமிழர் தமிழரே” என்ற உணர்வை அவர் தனது உரைகளிலும் செயல்பாடுகளிலும் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
பாரதிராஜா ஒரு திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் உணர்வுகளோடு தன்னை இணைத்துக் கொண்ட கலைஞராகவும் நினைவுகூரப்படுவார். ஈழத்தமிழர்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான அவரது குரல், தமிழ் மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் உலகத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்

![]()