இலங்கை

பாலச்சந்திரனை என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் பாதுகாத்திருப்பேன்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் உருக்கம்

இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் மௌனித்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இறுதிப் போர்

இந்தச் சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலளிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிப் போர் முடிவுக்கு வந்த பின்னர், பாலச்சந்திரன் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தால், அவரை நான் மிகவும் பாதுகாப்பான முறையில் உயிரோடு மீட்டெடுத்திருப்பேன். அவர் பிரபாகரனின் மகன் என்பதற்காக மட்டுமல்ல, ஓர் உன்னதமான மனிதநேய அடிப்படையிலேயே நான் இந்த முடிவை எடுத்திருப்பேன்.

ஏனெனில், போர் மௌனித்த பிறகு அந்தச் சிறுவனால் எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

பாலச்சந்திரன்

போர்க் காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த முக்கிய உறுப்பினர்கள் உட்படப் பலரை நான் ஏற்கனவே பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் அவர்களைப் புனர்வாழ்வின் ஊடாக விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தேன்.

எனவே, பாலச்சந்திரனுக்கும் அத்தகையதொரு உயர்பாதுகாப்பைத் தம்மால் தாராளமாக வழங்கியிருக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button