இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ரவூப் ஹக்கீம் ஏன் பயப்பட வேண்டும்.. எழுப்பப்படும் கேள்வி!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்டது யார் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த விசாரணை குறித்து ரவூப் ஹக்கீம் ஏன் பயப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன கேள்வி எழுப்பியுள்ளார்.

டித்வா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச மக்களுக்கு, வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்குக் காசோலைகளை வழங்கி வைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து, “ஆரம்ப காலத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும், அவர்களுக்கு சட்டரீதியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் ரவூப் ஹக்கீம்.

பலத்த நம்பிக்கை

ஆனால், இப்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் பலத்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. ஆனால், இவர்களோ பயப்படுகிறார்கள்.

உண்மை வெளிப்படுமாக இருந்தால், இவர்களுடைய அரசியல் வாழ்க்கை முற்றுப்பெறும் என்பதற்காகவே இவர்கள் அனைவரும் அஞ்சுகிறார்கள். எனவே, இந்த விடயம் குறித்து மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே அந்த ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் இன்று ஆழமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, மக்களை இனிமேலும் மதவாதத்தையோ, இனவாதத்தையோ கையில் எடுத்து அரசியல் செய்யும் எவரும் ஏமாற்ற முடியாது. கடந்த காலத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் இந்தத் தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்துவதற்கு அக்கறையோ, கரிசனையோ காட்டவில்லை. ஏனென்றால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த இரு பிரதான கட்சிகளிலுமே இருக்கிறார்கள்”

ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். மக்களின் தேவைகளை நிறைவேற்ற வந்த அரசாங்கம். எனவேதான், நாம் தூய இதயசுத்தியோடு இந்த ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம். நிச்சயம் உண்மை வெளிவரும். ஒருபோதும் இந்த விசாரணை நிறுத்தப்பட மாட்டாது.

வெறும் ஆர்ப்பாட்டங்களாலோ அல்லது உண்ணாவிரதப் போராட்டங்களாலோ இந்த விசாரணைகளை எவரும் நிறுத்திவிட முடியும் என கனவு காண வேண்டாம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button