இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக முன்னர் போராட்டம் இப்போது ஊடாட்டம்

எதிர்க்கடியில் இருந்தபோது இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டார்கள். இப்போது அரசாங்கமானவுடன் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பின்னாலே இருக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாடு பொருளாதார ரீதியில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஊடகங்களிலும்,இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் நிலக்கரி கொள்வனவு மோசடியாகும். மத்திய வங்கி ஆளுநருடான சந்திப்பின்போது இதுதொடர்பில் நாங்கள் கேட்டபோது, நிலக்கரி மோசடியும் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அது எனது பொறுப்பல்ல, கொள்கை தயாரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவும் ரூபா வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி அதிகரிக்கவும் வறுமை நிலை அதிகரிக்கவும் கடந்த ஒன்றரை வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளும் அரசாங்கத்தின் இயலாமையுமே காரணம். மின்கட்டண அதிகரிப்பில் ஆசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 6மாத காலத்துக்கு 15 பில்லியன் ரூபா இன்னும் செலுத்தாமல் இருக்கிறது. அப்படியாயின் அந்த நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட முடியும்?
அதேநேரம் எல் நினோ காலநிலை மாற்றம் ஏற்படப்போவதாக எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. எல் நினோ தாக்கம் எமது நாட்டுக்கு ஏற்படும்போது எமக்கு உணவு பாதுகாப்பு தொடர்பில் பாரிய ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான பிரதான காரணம்தான் அரசாங்கம் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்காமல் இருப்பதாகும். வெளிநாடுகளில் இருந்து ஒரு அரிசிமணி கூட இறக்குமதி செய்வதில்லை எனத் தெரிவித்த இவர்கள், 150,000 மெட்ரிக் தொன் வரை அரிசி இறக்குமதி செய்திருக்கிறார்கள். விவசாயத்துறையை வளம்மிக்கதாக மாற்றுவதாக தெரிவித்து 1300 பில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கினார்கள். ஆனால் இதுவரை 550 பில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது
மத்திய வங்கி ஆளுநர் இங்குவந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில், ரூபா வீழ்ச்சியடைவதால் பாதிப்பு இல்லை என தெரிவித்திருந்தார். அது எவ்வாறு சாத்தியம்?. ஆனால் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் நிச்சயமற்ற நிலை நிலையில் இருப்பதாகவே ஆளுநர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். நூற்றுக்கு 13 வீதமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்து ரூபா வீழ்ச்சியடைவதன் மூலம் எமது கடன் செலுத்தும் வீதமும் அதிகரித்துள்ளது.
நாட்டை அபிவிருத்தி செய்ய எடுத்த அனைத்து வேலைத்திட்டங்களுக்கு எதிராகவும் இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது போராட்டம் மேற்கொண்டு அனைத்தையும் நிறுத்தினார்கள். இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டார்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பின்னாலே இருக்கிறார்கள். இவர்கள் கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகளின் பாதிப்பையே நாங்கள் இன்றும் அனுபவிக்கின்றோம் என்றார்.
![]()