இலங்கை

நல்லூர் பெருந் திருவிழா காலத்தில் யாழில் சீனக் கண்காட்சிக்கு அனுமதி இடை நிறுத்தம்

நல்லூர் பெருந் திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து குறித்த புத்தக கண்காட்சிக்கான அனுமதி வழங்கலை யாழ். மாநகரசபை இடை நிறுத்தியுள்ளது.

யாழ். மாநகர சபையின் கடந்த நிதிக்குழு கூட்டத்தின் போது சபையின் ஆணையாளரால் இறுதி நேரத்தில் முன்வைக்கப்பட்ட மேற்படி புத்தகக் கண்காட்சி தொடர்பிலான முன்மொழிவு, யாழின் கலை கலாசார பண்பாடுகளையும் நல்லூர் ஆலயத்தை பிரதிபலிப்பதாக கொண்டதாகவும், எந்தவொரு பின்னணியும் இல்லாது இருக்குமானால் அதை ஏற்கமுடியாது என குறித்த முழுவின் உறுப்பினர்கள் கூறிய நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மறுநாள் யாழிலிருந்து வெளியாகும் இலத்திரனியல் ஊடகம் ஒன்றில், மேற்படி புத்தக கண்காட்சிக்காக சீனா முனைப்புடன் செயற்படுவதான கருப்பொருளுடன் செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து பூளோக அரசியலில் விடயத்தில் சிக்காதிருக்கும் வகையில் வியாழக்கிழமை சபை அமர்வில், மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, இவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டியதுடன் இது குறித்து ஆராயப்பட்ட பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என பிரஸ்தாபித்திருந்தார்.

குறிப்பாக அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய கலை, கலாசாரம் சார் தொடர்புகளை கொண்டுள்ள யாழ்ப்பாணம் வேறு கலாசாரத் தொடர்புடைய ஒரு புத்தகக் கண்காட்சியை அனுமதிப்பதில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த விடயத்தை ஆராய்ந்த பின்னரே அனுமதி கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் உறுப்பினர் தர்சானந்த் – யாழ். வர்த்தக கண்காட்சி இந்தியாவின் பின்னணியில் நடைபெறுவதால் அங்கு சீனாவுக்கு இடம் கிடைக்காமையால் யாழில் ஏதாவது ஓரிடத்தில் தானும் புத்தகக் கண்காட்சியை நடத்த நினைக்கும் சீனா சங்கிலியன் பூங்காவில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் மாநகர சபையால் ஏலத்தில் விடப்படும் ஓர் இடத்தை பெற்று நடத்த முயற்சிக்கின்றது என்ற சாரப்பட கூறியிருந்தார்.

மாநகர ஆணையாளர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க நினைப்பதாகவும், கூட்டங்களிலும் சபையின் நடவடிக்கைகளிலும் முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாகவும் இது புதிதாக வந்துள்ள ஆணையாளருக்கு சில வேளைகளில் தெரியாதிருக்கலாம் என்பதால் இந்த விதிமுறைக்கு அவரை செயற்படுமாறு அறிவுறுத்துமாறு முதல்வரால் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் குறித்த புத்தகக் கண்காட்சிக்கான அனுமதி முழுமையாக ஆராய்ந்த பின்னரே வழங்கப்படும் என்றும் அதுவரை எந்த நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படாதெனவும் தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button