வலி வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள்; காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவால் குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 15.06.1990 எமது ஊரில் இருந்து விரட்டப்பட்டு 36 வருடங்கள் 15.06.2026இல் நிறைவடைந்து 37வது வருடத்தில் கால் பதிக்கின்றோம். 2009இல் யுத்தம் நிறைவுற்று 17 வருடங்கள் நிறைவுபட்டுவிட்டது.
ஆனால் நாம் குறிப்பாக ஜே/248, ஜே/255 முழுமையாகவும் ஜே/251, ஜே/246ல் பகுதியளவிலும் விடுவிக்கப்படவில்லை. அதனால், பல போராட்டங்கள், சந்திப்புக்கள் நடாத்தியும் எமக்கு பலன் கிடைக்கவில்லை. அகதிகளாகவே வாழ்கின்றோம். 24.04.2026ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு வெள்ளியும் அறவழியில் தொடர்ந்து போராடி வரும் நாம் வரும் 15.06.2026 ஆந் திகதி மாபெரும் அறவழிப் போராட்டம் ஒன்றை யாழ் அரச அதிபர் அலுவலக முன்றலில் போராட உத்தேசித்துள்ளோம்.
இப்போராட்டத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்து இப் போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
![]()