பலதும் பத்தும்

2 மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி (வயது 28). வெல்டிங் வேலை பார்த்து வரும் இவருக்கு, சுமதி (26) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் சடையாண்டி அடிக்கடி தனது தொலைபேசியில் யாருடனோ பேசி வந்ததாகவும், இது குறித்து சுமதி கேட்டபோது சடையாண்டி ஒழுங்காக பதில் சொல்லாததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையாண்டி திடீரென மாயமானார். அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து வடமதுரை பொலிஸ் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். இதையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்தி சடையாண்டியை தீவிரமாக தேடினர். அப்போது சடையாண்டி புத்தூர் பிச்சம்பட்டியைச் சேர்ந்த நாகேஷ்வரி (வயது 21) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

நாகேஷ்வரியிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை சடையாண்டி மறைத்துள்ளார். மேலும், முதல் மனைவி சுமதிக்கு தெரியாமல் நாகேஷ்வரியை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் சடையாண்டி வாழ்ந்து வந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்த நிலையில், இது குறித்து பொலிஸார் சுமதியிடம் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சடையாண்டி, நாகேஷ்வரி மற்றும் சுமதி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அப்போது பொலிஸாரிடம் சடையாண்டி தெரிவிக்கையில், “எனது முதல் மனைவி சுமதி அடிக்கடி என்னுடன் தகராறு செய்து வந்தார். அதனால் நான் 2 ஆவது திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 2 மனைவிகளுடனும் சேர்ந்து வாழ சம்மதம். எனவே 2 மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள். நான் இருவரையும் வைத்து கவனித்துக் கொள்கிறேன்” என்றார். இதைக் கேட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் நாகேஷ்வரியும், “நான் சடையாண்டியுடன் வாழ விரும்புகிறேன். என்னை அவருடன் அனுப்பி வையுங்கள்” என்று பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டார். அதே சமயம் சடையாண்டியின் முதல் மனைவி சுமதியோ, தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களின் எதிர்காலம் கருதி தனது கணவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் மன்றாடினார்.

இந்நிலையில் பொலிஸார் சடையாண்டியிடம், “முதல் மனைவி இருக்கும்போது 2 ஆவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் சிறை செல்ல வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தனர். அதோடு நாகேஷ்வரிக்கும் அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்த பொலிஸார் சடையாண்டியிடம் அவரது முதல் மனைவி சுமதி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து வாழுமாறு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button