உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்திய சஹ்ரானுக்கு உதவியவர்கள்வெளியில் இருந்தால் ஆபத்து !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரான் குழுவினருக்கு உதவியவர்களில் எவராவது சுதந்திரமாக வெளியில் இருப்பாராக இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்றும் இதனால் அவர்கள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு எதிராக எதிர்க்கட்சியில் குழுவொன்று செயற்படுவது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது முஜிபூர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் சஹரான் குழுவினருக்கு ஏதேனும் வழியில் உதவிகளை வழங்கியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தை செயற்படுத்த வேண்டும். ஆனால் அவர்களில் எவராவது சுதந்திரமாக வெளியில் இருப்பார்களாக இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சில தகவல்கள் மற்றும் சாட்சிகள் கிடைத்துள்ள காரணத்தினாலேயே முன்னாள் புலனாய்வு பிரிவு பிரதானி தொடர்பான விசாரணைகள் நடக்கின்றன.
குறிப்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வாசித்தால் வாக்குமூலமளித்துள்ள முன்னாள் சட்டமா அதிபர் முதல் சகலரும் சில நபர்கள் தொடர்பிலும் சில விடயங்கள் தொடர்பிலும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்படி இந்த சூழ்ச்சியை செய்தவர்கள் யார் என்பதனை கண்டறிந்து அவர்கள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த வேண்டும்.
இதேவேளை இந்த விடயத்தில் சுரேஷ் சலே நிரபராதி என்றால் அவர் பயப்படாமல் நீதிமன்றத்தில், தான் குற்றமற்றவர் என்பதனை நிரூபிக்க முடியும். இதனையே அவர் செய்ய வேண்டும். இதனை செய்யாமல் உணவு தவிர்ப்பை மேற்கொண்டு, உண்ணாவிரதம் இருப்பதில் பிரயோசனமில்லை. அவர் புலனாய்வு பிரிவு பிரதானியாக இருந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக பலரை கைது செய்தார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியூதின் ஆகியோரையும் கைது செய்தார். இவர்களை பிரதான சூத்திரதாரிகள் என்றும் கூறினார். ஆனால் அவர்கள் அப்போது உண்ணாவிரதம் இருக்கவில்லை. நீதிமன்றத்தில் தாம் குற்றமற்றவர் என்பதனை நிரூபித்துள்ளனர். இதனையே சுரேஷ் சலேவும் செய்ய வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை வாசிக்கும் போது சூழ்ச்சிகரமான திட்டங்கள் இதனுள் இருந்துள்ளது வெளிப்பட்டுள்ளது. இதனை வெளிக்கொண்டுவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும்.
எவ்வாறாயினும் இதனை அரசியலாக்குவதற்கு நான் இணங்க மாட்டேன். இது அரசியலுக்கும் அப்பாலானது. ஆட்சிக்கு வருவதற்காக பயன்படுத்துவதல்ல. தேசிய ஒற்றுமை முக்கியமானது. சஹரானின் குழுவினருக்கு எவராவது உதவி செய்து அவர்கள் சுதந்திரமாக இருப்பார்களாக இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். இதனை அரசியலாக பார்க்காமல் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றே நான் கருதுகின்றேன் என்றார்.
![]()