இலங்கை

சாணக்கியனின் பிரேரணைக்கமைய மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தலாம்

மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும் எம்.பி.யுமான இரா.சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைக்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல் முறைமை பற்றி ஆராயும் விசேட செயற்குழு அதன் தலைவர் விஜித்த ஹேரத் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை கூடிய போது அதன் உறுப்பினரான இரா.சாணக்கியன் வெளிநாட்டில் இருந்தவாறு நிகழ்நிலை முறைமை ஊடாக குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு புதிதாக 3வழிமுறைகளை முன்வைத்துள்ள நிலையில், குழு அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் கிராமிய மட்டத்தில் கருத்து கணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என குழுவின் உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்வைத்த விடயத்தை இரா.சாணக்கியன் எம்.பி கடுமையாக எதிர்த்து, மீண்டும் கருத்து கணிப்புகளுக்கு சென்றால் ஒவ்வொரு தரப்பினரும் தமது நிலைப்பாட்டை முன்வைப்பார்கள். அது மாகாணசபைத் தேர்தலை மேலும் பிற்போடும் நிலைக்குத் கொண்டு செல்லும் என சுட்டிக்காட்டினார்

அதேவேளை மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த தனிநபர் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இல்லை. உள்ளடக்கத்தில் ஒருசில சொற்பிரயோகங்களை திருத்தம் செய்து தேர்தலை நடத்தலாம் என சட்டமா அதிபர் திணைக்களம் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு பழைய விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின் அதற்கு ஏதுவான வகையில் 3 வழிமுறைகளை முன்வைத்துள்ளது.

வாக்களிப்பின்போது விருப்பு வாக்களித்தல், பெண் பிரதிநிதித்துவத்துக்கு வாக்களித்தல், இளைஞர் பிரதிநிதிதித்துவத்துக்கு வாக்களித்தல் என்ற 3 வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த முறைமையை புரிந்து கொள்வதற்கு வாக்காளர்களுக்கு கடினமானதாக அமையும் என்று குழுவின் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் கூட்டங்களில் மேலும் தெளிவு படுத்த தீர்மானிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button