புனித ஹஜ் பெருநாள் இன்றாகும்

இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (28) கொண்டாடுகின்றனர்.
இறைவனின் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் ‘தியாகத் திருநாள்’ ஆகும்.
இதுவே ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் என்றும் அழைக்கப்படுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான ‘துல் ஹஜ்’ மாதத்தின் பத்தாம் நாளில் இப்பெருநாள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
ஹஜ் பெருநாளின் பின்னணியில் ஒரு உன்னதமான தியாக வரலாறு ஒன்று இருப்பதாக கூறப்படுகின்றது.
இறைத்தூதர் இப்ராஹீம் நபியின், வயதான காலத்தில் நீண்ட பிரார்த்தனைக்குப் பிறகு இஸ்மாயீல் நபி என்ற மகன் பிறந்தார்.
தன் உயிருக்கு மேலாக நேசித்த அந்த மகனை, இறைவனின் கட்டளைக்காகப் பலியிட இப்ராஹீம் துணிந்தார்.
தந்தையின் முடிவுக்கு மகனும் முழு மனதுடன் கட்டுப்பட்டார்.
நபி இப்ராஹிம் இறைக் கட்டளைக்கு இணங்க, அதை நிறைவேற்றத் தயாரானதன் மூலம் இறைவன் மீது தாம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்த்தினார்.
அதனால், மகனுக்கு பதிலாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளைத் தியாகம் செய்யுமாறு இறைவன் கட்டளையிட்டான்.
இவர்களின் இந்த அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும், அர்ப்பணிப்பையும் மெச்சுமுகமாக, மனிதர்களைப் பலியிடும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, விலங்குகளைப் பலியிடும் (குர்பானி) வழக்கத்தை இறைவன் அன்றிலிருந்து ஏற்படுத்தியதாக நம்பிக்கை.
விலங்குகளை பலி கொடுக்கும் சடங்கு குர்பான் என்று அழைக்கப்படுகிறது.
வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆடு, மாடு அல்லது ஒட்டகத்தை இறைவனின் பெயரால் பலியிட்டு குர்பானி கொடுக்கின்றனர்.
இந்த இறைச்சியானது ஒரு பங்கு தமது சொந்த குடும்பத்திற்காகவும்,மற்றொரு பங்கு தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், மூன்றாம் பங்கு ஏழை எளிய மக்களுக்காகவும் 3 பங்குகளாக பங்கிடப்படுகின்றன.
அதேநேரம், முஸ்லிம்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது.
அதனடிப்படையிலேயே தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை உணர்த்தும் புனித நாளாக ஹஜ் பெருநாள் அமைந்துள்ளது.
தம்மிடமுள்ள, தமக்குப் பிடித்தமான அனைத்தையும் படைத்த இறைவனின் நற்கருணையை மட்டும் எதிர்பார்த்து, ஏழை, எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தியாக மனப்பான்மையை இது ஊக்கப்படுத்துகின்றது.
இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று பெருநாள் தொழுகை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()