இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் இணக்கம்!

இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
முன்னணி அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நடைபெற்ற விசேட முதலீட்டு கலந்துரையாடல் சுற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கைத்தொழில், விவசாயம் மற்றும் நிலையான எரிசக்தித் துறைகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடல்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
நிலையான எரிசக்தி தீர்வுகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நவீன புடவைக்கான தொழில்நுட்பங்கள், வர்த்தக ரீதியான பால் பண்ணைகள் மற்றும் கால்நடை அபிவிருத்தி, கைத்தொழில் வலயங்களில் மீள்சுழற்சி அடிப்படையிலான பிளாஸ்டிக் கைத்தொழில்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாத்துறைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது வெளிப்படையான, நம்பகமான மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அரசாங்க ஆதரவு மற்றும் வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


![]()