முச்சந்தி

கடும் மழைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகளைத் தாங்கிய ஊர்திப் பவனி நல்லூரில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுகளைத் தாங்கிய ஊர்திப் பவனி ஓயாத மழைக்கு மத்தியிலும் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.45 மணியளவில் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக ஆரம்பமாகியது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. திலீபனின் நினைவுத் தூபியில் ஈகச் சுடரேற்றப்பட்டுத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகளைத் தாங்கிய ஊர்தியில் யாழ். மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கச் செயலாளர் நிர்மலநாதன் மேரி ரஞ்சினி சுடரேற்றி அஞ்சலித்ததைத் தொடர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களுக்கும், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும் ஒரு நிமிட அக வணக்கமும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேற்படி ஊர்திப் பவனி வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளையும் வலம் வந்து இறுதியாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button