முச்சந்தி

தெஹிவளை, யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு திருமண சேவை எனும் போர்வையில் பாரிய பண மோசடி

‘ ……. திருமண சேவை’ எனும் பெயரில் உள்ள இணையத்தளத்தை நம்பி உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனப் பொலிஸாரால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தெஹிவளை மற்றும் யாழ்ப்பாணத்தினைத் தளமாகக் கொண்டு இயங்குவதாக குறித்த திருமண சேவையைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக இணையத்தில் பாரிய பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடு மற்றும் உள்நாட்டு மணமகன், மணமகளைத் திருமண பந்தத்தில் இணைப்பதாகக் குறிப்பிட்டு திருமண வயதிலிருப்பவர்களின் பெற்றோரிடம் அதிகளவான பணத்தை வசூலித்து வருகின்றனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு வரன்களை நிச்சயம் தேடித்தருவோம் என உறுதி மொழி கூறிப் பதிவு செய்வதற்கு 25, 000 ரூபா எனக் கூறிப் பணத்தினை வங்கியூடாகப் பெற்றுக்கொண்டு பதிவினை மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் மணமகன், மணமகளின் புகைப்படங்களைச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் அனுப்பி பொருத்தம் நன்றாகவுள்ளது திருமணம் நிச்சயமாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து தொடர்பு எண்ணை வழங்கி இருவரையும் இணைத்து வைப்பதற்கு சுமார் ஒரு லட்சம் ரூபா முதல் இரண்டு லட்சம் ரூபா வரையும் பணத்தினைப் பெற்று தொடர்பினை ஏற்படுத்துவதாக உறுதிமொழி வழங்குகின்றனர்.

இந்த மோசடியில் இரு பெண்கள் பிரதானமாக ஈடுபட்டு உறுதிமொழிகளை வழங்கிப் பணத்தை அபகரித்து வருகின்றனர். இவர்கள், திருமணம் நடைபெறாவிட்டால் தாம் குறித்த பணத்தை திருப்பி வழங்குவதாக கூறியே பணத்தை இலாவகமாகப் பெறுகின்றனர். ஆனால், அவர்கள் தமக்குள்ளே சிலரை வைத்து மணமகன், மணமகள் போலப் பேச வைத்து நம்ப வைத்துப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் திருமண வயதிலுள்ள பலரிடமிருந்து பல லட்சம் ரூபாவை அபகரித்துக் கொள்கின்றனர்.

இந்த மோசடி தொடர்பாகப் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் மோசடியில் ஈடுபடும் பெண்களைத் தேடிப் பொலிஸார் வலைவிரித்து வருகின்றனர்.

தெஹிவளையில் இயங்கும் அலுவலகத்திற்கு, பாதிக்கப்பட்ட தரப்பினர் நேரில் சென்று பார்த்த போது அங்கு பெயர்ப்பலகை மாத்திரம் உள்ளது. அவர்கள் வாடகைப் பணம் சில மாதங்கள் வழங்காததால் குறித்த கட்டட உரிமையாளர் அவர்களை அவ்விடத்திலிருந்து துரத்தியதாகத் தெரிய வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button