இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்”: சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்க ஒப்புதல்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் ” (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில், குறித்த விடயங்களுக்குரிய அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான விசேட நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிநுட்ப விசேட நிபுணத்துவக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ எனும் பெயரிலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2026.08.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button