நாமல் அஞ்சுவது சரி!; சஜித் ஏன் அஞ்சுகிறார்?

ரணில் -ராஜபக்ஸ அரசாங்கத்தில் விடுதலை செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் ஷிரான் ராசிக் தற்போது கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே இனி பல விடயங்கள் வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறுதெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
வழக்குகளை விரைவாக விசாரித்து நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும் போது நாமல்ராஜபக்ஸ ,ராஜபக்ஸக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் கலக்கமடைவது ஆச்சரியத்துக்குரியதல்ல, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏன் கலக்கமடைய வேண்டும்?
எதிர்க்கட்சித் தலைவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளைக் கேட்கின்றார்.அவரது ஆலோசனைகளை பெற்றால் சஜித் பிரேமதாச தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராகவே இருக்க நேரிடும்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீதித்துறைக்கு எதிரானதல்ல, இந்த சட்டமூலத்தால் நீதித்துறையின் சுயாதீனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக எடுத்துக் கொள்வதற்காகவே நீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைக்கப்படுகிறது. நீதிமன்றம் சுயாதீனமாகவே செயற்படுகிறது. ஊழல்வாதிகளுக்கும், படுகொலையாளிகளுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் இதற்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
கடந்த கால அரசாங்கங்களின் அமைச்சர்கள் பல ஊழல் மோசடிகளுடன் தொடர்புப்பட்டுள்ளார்கள்.பலரது வழக்குகள் தொடர்ச்சியாக விசாரிக்கப்படுகிறது. பலர் சிறையில் உள்ளனர். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது ஊழல் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் எத்தனை வழக்கில் தான் கைது செய்யப்படுவார்? இவர் வழக்குப் பொருளாகவே தற்போதுள்ளார்.
நாமல் ராஜபக்ஸ ‘ நாங்கள் யார் என்று தெரியும் தானே, பின்கதவால் ஓடுபவர்கள் அல்ல’ என்று சபையில் சண்டித்தனம் பேசுகின்றார். ராஜபக்ஸக்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தாஜூதீன் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை என எண்ணற்ற படுகொலைகளுக்கும் இவர்களுக்கும் தொடர்புண்டு.
ரணில் – ராஜபக்ஸ அரசாங்கத்தில் விடுதலை செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் ஷிரான் ராசிக் தற்போது கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இனி பல விடயங்கள் வெளிவரும் என்றார்.
![]()