முச்சந்தி

ஆர்மேனிய இனஅழிப்பை அங்கீகரித்த சர்வதேசம்: இருபதாம் நூற்றாண்டின் கோர படுகொலை !..  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(துருக்கியின் பேரரசு தன் படை பலத்தால் ஆர்மேனிய மக்களை கொன்றது இனப்படுகொலையே என்று பல நாடுகள் தீர்மானம் நிறைவேற்றினாலும், துருக்கி அரசு ஆர்மேனிய இனப்படுகொலைக்கு எச்சான்றும் இல்லை என மறுத்துள்ளது)
ஆர்மேனிய மக்கள் மீது நடந்தேறிய இனஅழிப்பின் நினைவு நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ஆம் நாளன்று நடாத்தப்பட்டு வருகின்றது.
ஆர்மேனிய இன அழிப்பு :
ஆர்மேனிய இன அழிப்புக்கும் ஈழத்தில் இறுதியாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது தெட்டத் தெளிவாக தெரிகிறது.
ஆர்மேனிய இனஅழிப்பைப் பின்னோக்கிப் பார்க்கின்றபோது, 1915ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாளன்று ஒட்டோமன் துருக்கியர்கள், ஆர்மேனிய மக்களை சுற்றி வளைத்துக் மேற்கொள்ளப்பட்ட படுகொலையோடு தொடங்கிய இனஅழிப்பு, ஒட்டு மொத்தமாக 15 இலட்சம் ஆர்மேனிய மக்களைக் கொன்று குவித்த, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாக நடந்தேறிய ஓர் வரலாற்று கொடூரமாகும்.
ஆர்மேனியாவிலும், ஈழத்தில் தமிழர் மீதான இனப்படுகொலைகள் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டன என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட பின்னரும், இற்றைவரை துருக்கி இந்த கொடூர பாதக செயலுக்கு பொறுப்புக் கூற இல்லை. அத்துடன் அதனை ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பதே மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஆர்மேனிய இனஅழிப்புக்கும் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த இரு நிகழ்வுகளிலும் இன அடிப்படையிலான எழுந்த குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
கூட்டுத் தண்டனை இனஅழிப்பு ?
இக் கோரமிகு குற்றங்களை புரிந்தவர்கள், போரினால்தான் இக்கொலைகள் இடம்பெற்றன எனக் கூறித் தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றார்கள். அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இவை தவிர்க்க முடியாதவை எனக் கூறி நியாயப் படுத்தவும் முயல்கின்றார்கள்.
இரு தேசத்திளிலும் இனஅழிப்பானது கூட்டுத் தண்டனையாக பாரிய அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆர்மேனிய மக்களுக்கு துருக்கியர்களால் இழைக்கப்பட்டது இனஅழிப்பு என்பதை இன்று உலகில் 20 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆயினும் ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது.
அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 29 அக்டோபர் 2019 அன்று ஏற்றுக்கொண்டது.
துருக்கியின் பேரரசு தன் படைபலத்தால் ஆர்மேனிய மக்களைக் கொன்றது இனப்படுகொலையே என்று பல நாடுகள் தீர்மானம் நிறைவேற்றினாலும், துருக்கி அரசு ஆர்மேனிய இனப்படுகொலைக்கு எச்சான்றும் இல்லை என மறுத்துள்ளது.
ஆர்மேனியாவில் நிகழ்ந்தது இனப் படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு துருக்கி நாட்டைக் கோரும் தீர்மானம் ஒன்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2009 போர் முடிவின் பின்னர் இலங்கையில் தமிழினத்தின் மீது நடபெற்றது இனஅழிப்பு அல்ல என்பதனை நிலைநாட்ட சில சர்வதேச சக்திகள் முனைந்து வருகின்றன.
ஆயினும் உலகத் தமிழ் மக்கள்
ஈழத்தில் நடந்தது இனஅழிப்பே என்பதில் உறுதியாக உள்ளனர்.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு
உலக நாடுகள் செயலாற்ற வேண்டும்.
புலம்பெயர் ஆர்மேனிய மக்கள் சக்தி:
ஆர்மேனியாவிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் புலம்பெயர் மக்களின் மன உறுதியினாலும் இடைவிடா முனைப்புக்களினாலும் இன்று அவர்களிடத்தில் பல நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், ஆலோசனைக் கூடங்கள், ஊடகங்கள் எனப பலவும் இயங்கி வருகின்றன.
கொடூரமான இனவழிப்பின் பின் ஆர்மேனிய மக்களை உலகெங்கும் புலம்பெயர வைத்தது.
புலம்பெயர்ந்த ஆர்மேனிய மக்கள், உலகில் பலம் வாய்ந்த புலம்பெயர்ந்த சமூகக் கட்டமைப்புகளில் முக்கியமான தரப்பாகும்.
அவர்கள் தனித்து உணர்வுரீதியான செயற்பாடுகளுடன் மட்டும் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை.
சோவியத்தில் ஆர்மேனிய தேச உருவாக்கம் :
சோவியத் ஒன்றிய காலத்திலேயே ஆர்மேனிய தேச உருவாக்கத்தில் சொந்த நிகழ்ச்சி நிரலில் நேர்த்தியான நிர்வாக முகாமைத்துவத்தோடு தமக்குரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்கள்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் ஆர்மேனியா தன் சுயநிர்ணய உரிமையை முழுமையாக அடைந்துள்ளது. ஆயினும் ஆர்மேனிய மக்கள் துருக்கியால் நிகழ்த்தப்பட்ட
இக்கொடிய அநீதி இனி ஒரு போதும் நடைபெறாமல் தடுப்பதற்கும் வழி வகுத்து, தமது உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் கூறியது போல “ஒரு கொடுமையை மறைப்பது அல்லது மறுப்பது என்பது, காயம் ஒன்றிலிருந்து இரத்தம் ஓடுவதைத் தடுப்பதற்கு கட்டுப்போடாமல் இருப்பதை ஒத்தது” என்ற கூற்று ஆர்மேனிய மக்களுக்கும் ஈழத்தமிழர்க்கும் மிகவும் பொருத்தமாகும்.
இன்றைய உலகில் பல நாடுகள் ஆர்மேனிய இனஅழிப்பை அங்கீகரித்து உள்ளன. ஆயினும்
சர்வதேசம் ஈழத்தமிழர் இனப்படுகொலையை
ஏற்க மறுப்பது ஏன் என்பது தமிழ்மக்களை மாற்றாந் தாய் மனப்பாங்குடன் புறக்கணிப்பது போல தென்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button