கவிதைகள்

மானத்தின் அழுத்தம்… கவிதை… முத்தழகு கவியரசன் , திருநெல்வேலி

அவர் கடைக்குள் இப்போது
எதுவும் சரியாக வெட்டுபடுவதில்லை.
கத்திரிக்கோல் நழுவுகிறது.
முடி சரிசமாக விழுவதில்லை.
ஏனெனில் அவரின் கைக்குள் இருப்பது
வெறும் இரும்பு அல்ல,
ஒரு மகள் ஓடிப்போன இரவின் நடுக்கம்.

ஒரு காலத்தில்
அவர் ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும்
சொல்லி வைத்திருந்தார்.
“என் பொண்ணு நல்லா படிப்பாள். அரசு வேலை வாங்குவாள்.
நான் தலை நிமிர்ந்து நிற்பேன்.”
இப்போது அந்த வாக்கியங்கள்
தொண்டையில் கட்டியாகி நிற்கின்றன.
சொல்ல முடியாது. விழுங்கவும் முடியாது.

அவள் ஓடவில்லை.
அவர் கட்டிய கனவைத் தான்
இழுத்துக்கொண்டு ஓடினாள்.
ஒரு பெயரில்லாதவனோடு
ஒரு முகவரியில்லாத வாழ்கைக்கு.
அன்று முதல் அவர் வீட்டு வாசலில்
இரண்டு செருப்பு ஜோடி அனாதையாக கிடக்கிறது.
ஒன்று அவருடையது.
மற்றொன்று அவருக்கு இனி சொந்தமில்லாதது.
முடி வெட்ட வருபவர்கள் “பொண்ணு எப்படி இருக்கா?”
என்று கேட்கும் போது,
அவர் கண்ணாடியை துடைப்பதாக நடிக்கிறார்.
ஏனெனில் கண்ணில் இருப்பது தூசி அல்ல
தடுக்க முடியாத ஈரம்.
அவர் சொல்ல விரும்புவது ஒன்றே.
“என் பொண்ணு என்னை விட்டு போய்விட்டாள்.
ஆனால் அவள் பெயர் சொல்ல
எனக்கு இன்னும் தைரியம் இல்லை.”

இரவு கடையை மூடும் போது
எண்ணும் காசில்
அவரின் இதய அழுத்தத்துக்கான
மருந்து கணக்கில் வருவதில்லை.
ஏனெனில் அந்த அழுத்தம் உடலில் இல்லை.
அது மானத்தில் ஏறியது.
அது குனிந்த தலையில் ஏறியது.

அவர் இப்போது யாரிடமும் பேசுவதில்லை.
பேசினால் குரல் உடைந்து விடும் என்ற பயம்.
எனவே கத்திரிக்கோல் மட்டும் பேசுகிறது.

அந்த சத்தத்தில்
ஒவ்வொரு முறையும்
அறுந்து விழுவது முடி அல்ல.
ஒரு தகப்பனின் நம்பிக்கை.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button