இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் தங்காலை வாராந்த சந்தையில் போதைப் பொருள் விற்றிருப்பர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காது விட்டால் தங்காலை பகுதியில் வாராந்த சந்தையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி. நஜித் இந்திக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமைஇடம் பெற்ற தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கடந்த காலங்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அரசியல்வாதியை கைது செய்வதற்கு பொலிஸார் செல்கையில் நாட்டின் ஜனாதிபதி அவ்விடத்துக்கு சென்று அந்த அரசியல்வாதியை கட்டித்தழுவி காப்பாற்றியுள்ளார். .இவ்வாறான நிலை தற்போது இல்லை.பாதாளக் குழுக்கள் அல்லது போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்படும் போது தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் அவர்களை பாதுகாப்பதற்கு செல்வதில்லை.. ஏனெனில் அவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய எவரும் அரச தரப்பில் இல்லை.
நாட்டில் என்றுமில்லாத வகையில் தற்போது பாரியதொகைகளில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்படும் போது ஒரு அரசியல் கட்சி மட்டும் போதைப்பொருள் கைப்பற்றல் மற்றும் பாதாள குழுக்கள் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்பை நடத்துகிறது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காது விட்டால் தங்காலையில் வாராந்த சந்தையில் போதைப்பொருள் விற்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
கைப்பற்றப்படும் போதைப்பொருள் தொடர்பில் தீவிரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன . ஆகவே ஊடக சந்திப்பை நடத்துபவர்கள் கலக்கமடைய வேண்டாம் உண்மை வெகுவிரைவில் வெளி வரும் என்றார்.
![]()