முச்சந்தி

டிரம்பின் அதீத வரித் திணிப்பும் இந்தியா – சீன மேம்படும் உறவும்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு சீரிய மாற்றத்தை சமீபத்திய ஆண்டுகளில் காணக் கூடியதாக இருக்கிறது. சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் பதட்டங்களைத் தணிக்க ரோந்து ஏற்பாடுகளை ஏற்பாடு செய்வதில் இந்தியாவும் சீனாவும் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புக் கொண்டன.
இரு தரப்பினரும் உறவுகளை இயல்பாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதில் சீனா இந்த ஆண்டு திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களுக்கு இந்திய யாத்ரீகர்களைப் பார்வையிட அனுமதித்து உள்ளது)
சீனாவும் இந்தியாவும் எதிரிகளாக அல்ல, கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அண்மையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகள் பண்டைய காலங்களிலேயே இருந்து வந்துள்ளன. அத்துடன் பட்டுப் பாதையானது (Silk Road) இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான முக்கியமான வணிகப் பாதையாக மட்டும் செயல்படவில்லை. அதுவே இந்தியாவிலிருந்து கிழக்கு ஆசியாவுக்கு பௌத்த மதம் பரவுவதற்கும் அது உதவியாக இருந்ததென குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவும் சீனாவும் ஒருவரையொருவர் எதிரிகள் அல்லது அச்சுறுத்தல்கள் என்பதற்குப் பதிலாக கூட்டாளிகளாக பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளமையை இரு நாடுகளும் நட்புடன் பகிர்ந்து கொண்டுள்ளன.
சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு பின்னர்
இரு தரப்பு உறவுகள் இப்போது ஒத்துழைப்பை நோக்கி செல்கின்றன என்றும் கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள கால்வானில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்தன. அப்போது இருந்து உறவுகளை சுமூகமாக்க இந்தியாவும் சீனாவும் மெதுவாக வேலை செய்து வருகின்றன.
2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான நட்புறவு சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. சர்ச்சைக்குரிய இமயமலை எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கொடிய மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முற்றிலுமாக முறித்துக் கொண்டன.
உறவும் எல்லைப் பிணக்கும் :
நீண்ட காலமாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவானது எல்லைப் பிணக்குகளால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டின் இந்திய சீனப் போர், 1967 ஆம் ஆண்டின் சோ லா மோதல் மற்றும் 1987 ஆம் ஆண்டின் இந்திய சீன எல்லைச் சண்டை ஆகிய மூன்று போர்கள் நடைபெற்றுள்ளன.
2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு நாடுகளும் சர்ச்சைக்குரிய பூட்டான்-சீன எல்லையில் டோக்லாம் என்ற இடத்தில் சிறு சண்டையில் ஈடுபட்டன. பல்வேறு யுத்தங்கள் காரணமாக இரு நாடுகளும் முரண்பாடுகளில் மூழ்கி இருந்தன.
எனினும் 1980 களின் பிற்பகுதி முதல் இருநாடுகளும் வெற்றிகரமாக தூதரக மற்றும் பொருளாதார உறவுகளை மீள் உருவாக்கியுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உருவானது. இரண்டு நாடுகளும் அவற்றின் மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளையும் விரிவாக்கம் செய்தன.
கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகம் தவிர பரஸ்பர ஆர்வமுள்ள மற்றய துறைகளிலும் இருநாடுகளும் சமீபகாலமாக ஒத்துழைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருநாடுகளும் சர்வதேச வர்த்தகம், காலநிலை மாற்றம் மற்றும் நிதி சார்ந்த உலக நாடுகளின் வரிசையின் சீர்திருத்தம் மற்றும் பிற பொதுவான ஆர்வமுடைய பகுதிகளை ஊக்குவிக்க ஒத்துழைத்து வருகின்றன.
அணு ஆயுத அண்டை நாடுகள்:
இந்தியாவும் சீனாவும் கடந்த உறவுகளில் ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்து முன்னேற முயற்சி செய்து வருகின்றன. வர்த்தகம் முதல் புனித யாத்திரைகள் மற்றும் நதி தரவு பகிர்வு வரை, பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் இணைந்து விவாதித்து வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் எல்லைகளில் இப்போது ஸ்திரத்தன்மை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு சீரிய மாற்றத்தை சமீபத்திய ஆண்டுகளில் காணக் கூடியதாக இருக்கிறது. சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் பதட்டங்களைத் தணிக்க ரோந்து ஏற்பாடுகளை ஏற்பாடு செய்வதில் இந்தியாவும் சீனாவும் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புக் கொண்டன.
அப்போதிருந்து, இரு தரப்பினரும் உறவுகளை இயல்பாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதில் சீனா இந்த ஆண்டு திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களுக்கு இந்திய யாத்ரீகர்களைப் பார்வையிட அனுமதித்ததும் அடங்கும்.
மற்றோர் முன்னேற்றகரமான விடயமாக சீன சுற்றுலாப் பயணிகளுக்கான விசா சேவைகளையும் இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் நியமிக்கப்பட்ட பாஸ்கள் மூலம் எல்லை வர்த்தகத்தைத் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் தகவல்கள் உள்ளன.
அமெரிக்க வரியும் சீன உறவும்:
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இடைவெளி அதிகரித்தால் அது சீனா மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பல பொருளாதார வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான நெருங்கிய உறவின் பலன்கள், இரண்டாம் ஆட்சிக் காலத்தில் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் சில வழிகளில் சீனா பலனடையலாம் எனவும் கருதப்படுகிறது.
2024-25 நிதியாண்டில் இந்தியா மற்றும் சீனா இடையேயான வர்த்தகம் 127.71 பில்லியன் டாலராக இருந்தது. அதே வேளையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் 132.21 பில்லியன் டாலராக இருந்தது.
இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பல்வேறு விவகாரங்கள் பற்றிய கேள்விகள் தற்போதும் உள்ளன. எனினும், இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக அமெரிக்காவே உள்ளது. அதே சமயம் சீனா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் அமெரிக்காவுக்கான மாற்றாக இந்தியாவுக்கு சீனா இருக்க முடியுமா என்கிற கேள்வி உள்ளது. ஆனால் அது எப்போதும் நடக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்பில் எந்த விரிசலும் இருக்கப் போவதில்லை. சீனாவால் எப்போதும் அமெரிக்காவின் இடத்தை நிரப்ப முடியாது. இந்தியா தான் ஏற்றுக்கொண்டுள்ள பல அணி கொள்கை மூலம் சீனா உடனான தனது உறவுகளை மேம்படுத்த முயன்று வருகிறது என்பதே உண்மை ஆகும்.
குறையுமா சீன எதிர்ப்பு மனநிலை:
உக்ரேன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது. இதனால் தற்போது அமெரிக்கா உடனான அதன் உறவுகளில் பதற்றத்தை உருவாக்கி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை பாதித்துள்ளது.
சர்வதேச எரிபொருள் சந்தைகளை நிலையாக வைத்திருக்க முன்னைய பைடன் நிர்வாகம் தான் ரஷ்ய எண்ணெயை வாங்கச் சொல்லி தங்களிடம் வற்புறுத்தியதாக இந்தியா கூறுகிறது. ஆனால் உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் இயந்திரம் தொடர்ந்து இயங்க இந்தியா ஒரு காரணமாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஒருபுறம் அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. மறுபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.
சீனாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, மக்களின் பொது உணர்வு யாருக்கு எதிராக உள்ளது எனப் பார்க்க வேண்டும். சீனாவுடன் நீண்ட கால எல்லை தகராறு இருந்து வருகிறது. ஆனால் டிரம்ப் மற்றும் மோதிக்கு இடையேயான நட்புக்கு அப்பாலும் ஒருதலைபட்சமான வரிவிதிப்பு இந்தியாவில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு சீன எதிர்ப்பை விட எந்த விதத்திலும் குறைவானது இல்லை. இந்தியா மீது ஐம்பது வீத வரிகளை விதித்தது போல இந்தியாவின் அண்டை நாடுகள் மீது வரிகளை அமெரிக்கீ விதிக்கவில்லை என்பது உண்மைதான்.
ஆனாலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதறான பல காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த சில மாதங்களாக இருநாடுகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனா பொருளாதார வளமிக்க நாடாக உள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகஸ்ட் மாதத்தில் டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது இந்தியாவும் சீனாவும் ஒருவரையொருவர் எதிரிகள் அல்லது அச்சுறுத்தல்கள் எனப் பார்க்காமல் கூட்டாளிகளாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வாங் யீ-ஐ சந்தித்த பிறகு இந்தியா மற்றும் சீனா இடையேயான நிலையான, நம்பத்தகுந்த மற்றும் ஆக்கப்பூர்வமான உறவுகள் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலக அமைதி மற்றும் செழிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளமை இரு நாட்டு உறவுகள் வலுப்பெற பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *