முச்சந்தி

பலாலி விமான நிலையத் புனரமைப்பு; உறுதிமொழியில் இதுவரை ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை

யாழ். பலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள போதும், அதுசார்ந்த எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே சிறீதரன் எம்.பி இவ்வாறு கேட்டார்.
அவர் அமைச்சரிடம் கேள்வியெழுப்பி தெரிவிக்கையில்,

இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வடக்கு – கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இவ்விமான நிலையம் ஊடாகவே எயார்சிலோன் நிறுவனத்தின் முதலாவது விமானப் பயணம் இரத்மலானையிலிருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்புக்கும் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டு பின்னரான போர்க்காலச் சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

போருக்குப் பின்னர், இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்றபோதும், தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில், ஏ-320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்கி, அதன்மூலம், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்த விமானநிலையம் ஊடாக வருகை தருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக, பெரியரக விமானங்கள் செயற்படத் தொடங்கினால், பயணிகள் கொண்டுவரக் கூடிய பொதிகளின் அளவு 15 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்படும். இதனால் வடக்கு – கிழக்கிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் தெரிவாக பலாலி விமானநிலையமே முன்னுரிமை பெறும். இதன்மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைவதுடன் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படும்.

அதேவேளை, வடக்கு கிழக்கிலுள்ள வரலாற்றுத் தொன்மை மிகு ஆலயங்களை தரிசிக்க பெருமளவு இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறான பின்னணியில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன? மேற்குறித்த அடிப்படையில் விமான நிலையத்தின் சேவைப்பரப்பை விரிவாக்குவதன் மூலம் புலம்பெயர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எவையேனும் அரசிடம் உள்ளதா? அமைச்சர் கடந்த 2025.03.30ஆம் திகதி தாங்கள் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதந்த போது, ஆறுமாத காலத்திற்குள் இவ்விமானநிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்படும் என உறுதியளித்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள போதும், அதுசார்ந்த எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அறித்தர முடியுமா?

வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய நாட்டின் உதவியுடனேயே இந்த விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவி எவ்வளவு என்பதையும், இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்பதையும் அமைச்சர் தெரிவிப்பாரா?

அவ்வாறு எந்தத் தடைகளும் இல்லையெனில், பலாலி விமானநிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது முடிவுறுத்தப்படும் என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கலாமா? ஆமெனில், இதுவரை எத்தனை பேருக்கு, எவ்வளவு தொகை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும், இன்றுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாதவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *