முச்சந்தி

உக்ரைனுக்கு நேட்டோவில் உறுப்புரிமை இல்லை!…  ஐரோப்பாவில் ரஷ்ய ஆதிக்கம் மோலோங்கிறதா?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த திங்களன்று வாஷிங்டனில் அதிபர் டிரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படமாட்டாது என வாஷிங்டன் ராஜதந்திர வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன)
அலாஸ்காவில் டிரம்ப் – புட்டின் இருவரும் நேரில் சந்தித்த மாநாட்டுக்குப் பின்னர் நேட்டோவின் பாதுகாப்பை ஒத்ததான பாதுகாப்பு உத்தரவாதம் மட்டுமே உக்ரைனுக்கு கிடைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படமாட்டாது எனவும் வாஷிங்டனில் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை கிடைத்தால் மேற்கின் அச்சுறுத்தல் ரஷ்யாவின் எல்லைவரை வந்துவிடும் என்று மாஸ்கோ அரசு அஞ்சுகிறது. இதனால் அதைத் தொடர்ந்து ரஷ்ய எதிர்த்து வருகிறது. தற்போதைய உக்ரேனிய போருக்கான மூல காரணமும் அதுவே ஆகும்.
நிகழும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக புட்டினின் இணக்கத்துடன் அமெரிக்கா தயாரிக்கின்ற சமாதான உடன்படிக்கையில் இந்த விடயம் மிக முக்கிய அம்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்:
நேட்டோ அமைப்பின் உடன்படிக்கை சொல்லும் சரத்து 5 பாதுகாப்பு உத்தரவாதம் (Article 5 type guarantee) உக்ரைனுக்குக் கிடைப்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் அதன் நீண்ட காலக் கோரிக்கையான வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளுடனான உறுப்புரிமை வழங்கப்படமாட்டாது என்பது உறுதியாகி உள்ளது.
உறுப்பு நாடு ஒன்று தாக்கப்பட்டால் கூட்டணியின் அனைத்து நாடுகளும் தாக்கப்பட்டதாகக் கொள்ளப்பட்டுக் கூட்டான பதில் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நேட்டோவின் சரத்து 5 உறுதிப்படுத்துகிறது. அத்தகைய பாதுகாப்பு உத்தரவாதத்தையே சமாதான உடன்படிக்கை உறுதிசெய்யும் என்று சொல்லப்படுகிறது.
அமைதிக்கான முயற்சிகள் எதுவாயினும் உக்ரைனின் நில ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் முழுமையாக உத்தரவாதப்படுத்தும் விதமாக அமையவேண்டும் என்பதை கீவ் அரசும் அதன் ஐரோப்பியக் கூட்டணி நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை, உக்ரைனின் இரண்டு பிராந்தியங்கள் மொஸ்கோவுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அதிபர் புட்டின் அலாஸ்கா மாநாட்டின் போது முன்வைத்தார்.
குறிப்பாக உக்ரைனின் கிழக்கே டொனெஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Luhansk) பகுதிகளை உள்ளடக்கிய பெரிய பிராந்தியமாகிய டொன்பாஸில்(Donbass) இருந்து உக்ரைன் படைகள் வெளியேற வேண்டும். அதற்குப் பதிலாக ஏனைய முக்கிய போர் முனைகளில் ரஷ்யா போரை நிறுத்தும் என்று புடடின் யோசனை முன்வைத்துள்ளார். எல்லைகளைப் பரிமாறுகின்ற இந்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரிக்கிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெலென்ஸ்கி வாஷிங்டனில்:
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த திங்களன்று வாஷிங்டனில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆகஸ்ட் 18, 2025 அன்று, உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் ஒரு முக்கியமான உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
வாஷிங்டன் சந்திப்பு உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவர நோக்கமாகக் கொண்டது. இந்த உயர் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அலாஸ்காவில் நடந்த சமீபத்திய உச்சிமாநாட்டின் பின்னணியில் நடைபெற்றது.
அந்த உச்சிமாநாடு போர் நிறுத்தத்தை ஈடுசெய்யத் தவறியது, ஆனால் புதிய பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது. இதன் முடிவில் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படமாட்டாது என வாஷிங்டன் ராஜதந்திர வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
மேலும் அலாஸ்கா மாநாட்டு யோசனைகள் வெற்றியை நோக்கி நகருமா என்பது ஜெலென்ஸ்கியின் கைகளிலே தான் உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிலைப்பாட்டில் மாற்றம்:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பிற்குப் பிறகு, உக்ரைனில் போர் நிறுத்தத்தை தவிர்த்து நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு நேரடியாக செல்ல விரும்புவதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றி, ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு உக்ரைனை ஒப்புக்கொள்ள வலியுறுத்தியும் வருகிறார்.
அலாஸ்கா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஒரு பெரிய மாற்றத்தில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சிறந்த வழி இதுவாக இருக்கும் என்று கூறிய அமெரிக்க அதிபர், போர் நிறுத்தங்கள் பெரும்பாலும் நிலைத்து நிற்காது என்றும் கூறினார்.
மேலும் உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு அவரை வலியுறுத்தி வருகின்றார். அலாஸ்கா உச்சி மாநாட்டிற்குப் பிறகு ஜெலென்ஸ்கி உண்மையான நீடித்த அமைதிக்கு அழைப்பு விடுத்து, போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
உச்சி மாநாட்டிற்கு முன்னதாக விரைவாக போர் நிறுத்தத்தை விரும்புவதாகக் கூறிய டிரம்பின் கருத்துக்கள், போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த அவரது நிலைப்பாட்டில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கின்றன.
நீண்ட கால தீர்வுக்கான பேச்சுவார்த்தை தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று அவர் நம்புகிறார்.
ஆனாலும் நீண்ட கால தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு விரைவான போர் நிறுத்தம் என்பதே உக்ரைனின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது, மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பெறுவதே உச்சிமாநாட்டிற்கான தனது இலக்கு என்று டிரம்ப் ஐரோப்பிய தலைவர்களிடம் முன்பே கூறியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் புட்டின் சமாதானம் திரும்ப ஒரு வாய்ப்பை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் உக்ரைன் அதன் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ரஷ்யாவுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது ரஷ்யா அங்கே 70% பிராந்தியத்தை ஆக்கிரமித்து இருக்கிறது.
எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் “சில பிரதேசங்களை மாற்றுவதை” உள்ளடக்கும் என்று முன்னர் கூறிய அமெரிக்க ஜனாதிபதி, உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஒரு தொலைபேசி அழைப்பில் உக்ரைன் ஜெலென்ஸ்கிக்கு இந்த வாய்ப்பைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய டான்பாஸ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறார். மேலும் எதிர்கால ரஷ்ய தாக்குதல்களுக்கு இந்த பிரதேசங்களே ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் டிரம்ப் ஜெலென்ஸ்கி மீது பாரிய அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யலாம்.ரஷ்யா ஒரு மிகப் பெரிய சக்தி என்றும், உக்ரைன் தலைவரை ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
அலாஸ்காவில் புட்டினின் திறமை:
புட்டின் உலகளாவிய கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் தலைவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி புவிசார் அரசியல் வெளிச்சத்தில் தனது வெற்றி மிக்க தருணத்தைப் பெற்றார்.
அலாஸ்காவில் ஜனாதிபதி டிரம்ப், கிரெம்ளின் தலைவரை ஒரு கெளரவ விருந்தினராகக் கருதி, விளாடிமிர் புட்டினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கினார்.
இதற்கு முன்னதாக அவர் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான அணுகுமுறையை அச்சுறுத்தியிருந்தார். இறுதி எச்சரிக்கைகள், காலக்கெடு மற்றும் மாஸ்கோ போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளை புறக்கணித்தால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
ஆனாலும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர புடினை இன்னும் அவரால் வற்புறுத்த முடியவில்லை. டொனால்ட் டிரம்ப் ரஷ்ய போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆயினும் விளாடிமிர் புட்டின் இலகுவாக எதற்கும் சம்மதிக்கவில்லை.
இனிவரும் நாட்களில் உக்ரைனிலும், ஐரோப்பாவிலும் அமைதி திரும்புமா என்பது சந்தேகமே என்றாலும், ரஷ்ய – அமெரிக்க உறவு மீண்டும் வலுப்பெற்று வருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக டிரம்ப் – புட்டின் நட்பு குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எவ்வாறாயினும் உக்ரைனுக்கு நேட்டோவில் உறுப்புரிமை இல்லை என்பது தெளிவாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்
ஐரோப்பாவில் ரஷ்ய ஆதிக்கம் மோலோங்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *