3 1/2 ஆண்டு தடைக்கு பின் 39 வயதில் சிம்பாப்வே அணிக்கு திரும்பினார் டெய்லர்

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் மூன்றரை ஆண்டு தடைக்கு பின்னர் சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் பிரன்டன் டெய்லர் தனது 39 வயதில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று (07) புலவாயோவில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே டெய்லர் சிம்பாப்வே அணியில் இடம்பெற்றுள்ளார். ஐ.சி.சி. ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காகவே டெய்லருக்கு தடை விதிக்கப்பட்டது. அவரது தடைக்காலம் ஜூலை 25 ஆம் திகதி முடிவடைந்ததை அடுத்தே சிம்பாப்வே அணிக்கு அழைக்கப்பட்டார்.
“எல்லாம் முடிந்து விடும் என்று நான் நிச்சயமாக நினைத்தே. இப்போது நான் வந்துவிட்டேன். இதற்காக நான் நன்றியுள்ளவனாவேன். உண்மையில் நான் இங்கே இருக்கிறேன் என்பதை என்னை நானே கிள்ளிப் பார்த்து உறுதி செய்து கொள்கிறேன்” என்று தடையில் இருந்து மீண்டு வந்தது குறித்து டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணயித்திற்காக தம்மை அணுகியது தொடர்பில் ஐ.சி.சி. இடம் உடன் முறையிடாத குற்றச்சாட்டிலேயே அவர் போட்டித் தடைக்கு உள்ளானார். தடை காரணமாக திடீரென ஓய்வை அறிவித்த டெய்லர் 2021 செப்டெம்பர் தொடக்கம் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் ஆடாமால் இருந்தார். அவரின் தடை காரணமாக அவரால் எந்த ஒரு தேசிய அல்லது உள்ளூர் அணிக்காக ஆடுவதற்கு மற்றும் பயிற்சி பெற முடியாமல் இருந்தது. எவ்வாறாயினும் அவர் ஹராரேவில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் வசதிகளை பயன்படுத்தி தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். முன்னரை விடவும் தான் உடல் தகுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
2004 இல் சிம்பாப்வே அணியில் முதல் முறை இடம்பெற்ற டெய்லர் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்களுடன் 2320 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு 205 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 11 சதங்களுடன் 6684 ஓட்டங்களை குவித்துள்ளார்.
![]()