அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம்!… கவிதை… ஜெயராம்சர்மா

பத்து அவதாரம் பரந்தாமன் எடுத்தார்
பழிபாவம் போக்கிடவே அவதாரம் எடுத்தார்
அத்தனையும் இத்தரையில் அறமோங்கச் செய்ய
அவரெடுத் ராரென்று அகமிருத்தி வைப்போம்
மச்சமாய் வந்தார் கூர்மமாய் வந்தார்
வராகமாய் வந்தார் நரசிம்மன் ஆனார்
வாமன வடிவத்தில் வந்தாரே பரந்தாமன்
பரசுராம ரானார் அரக்கர்மாளச் செய்தார்
உத்தமனாய் வந்தார் சத்தியத்தைக் காத்தார்
உயர்வுடைய இராமனாய் அவதாரம் எடுத்தார்
சத்தியத்தைச் சந்தர்ப்பம் ஆக்கியே நின்று
கிருஷ்ணாய் மலர்ந்தார் கீதையைத் தந்தார்
ஒன்பது அவதாரம் எம்பெருமாள் கொண்டார்
உட்பகையை உடைத்துமே உயர்பொருளாய் உயர்ந்தார்
பாரினிலே பலதுஷ்டர் பல்கி வருகின்றார்
பத்தாவ தவதாரம் பரந்தாமன் எடுப்பார்
கஷ்டங்கள் ஓங்கும் துட்டர்கள் வருவார்
கண்ணியத்தில் உள்ளார் கண்ணீரில் மிதப்பார்
சத்தியமும் தர்மமும் தடுமாறித் தவிக்கும்
இத்தருணம் எம்பெருமாள் அவதாரம் எடுப்பார்
அவதாரம் அனைத்துமே அல்லெலாம் போக்கும்
அவதார தத்துவத்தை அறியாதார் அறியார்
அறிந்துணர்வார் அனைவருமே அஞ்ஞானம் இல்லார்
அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம் !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()