ஹெரோயினுடன் கைதான யாழ். வாசியின் 16 இலட்சம் ரூபா சொத்து பொலிசாரால் முடக்கம்

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைதைத் தொடர்ந்து, சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபருக்குச் சொந்தமான 6 இலட்சம் ரூபா பெறுமதியான படகு, அதன் இயந்திரம் மற்றும் சுமார் 9 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இச்சந்தேகநபர் மற்றும் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()