மேற்கு வங்கத் தேர்தல் முடிவு சொல்லும் செய்தி என்ன?… நியூசிலாந்து சிற்சபேசன்

மேற்கு வங்க அரசியலை, 2026 சட்டமன்றத் தேர்தல் புரட்டிப் போட்டிருக்கின்றது. 2011ல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திரிணமூல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கின்றார்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, மேற்கு வங்கத்திலே இடதுசாரிகள் வலுவாகக் காணப்பட்டனர். அதனால், காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திணறிக்கொண்டிருந்தன.
அத்தகையதொரு சூழலிலேயே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மம்தா பானர்ஜி புதியதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியை 1997ல் ஆரம்பித்தார். ஆனாலும், மேற்கு வங்க அரசியலில் தலையெடுக்கத் திணறினார்.
1980களிலேயிருந்து, மேற்குவங்கத்திலே காலூன்றுவதற்கு பாஜக தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தது.
“எதிரிக்கு எதிரி நண்பன்” என்னும் கோட்பாடு பயன்பட்டது.
பாஜகவுக்கு மேற்குவங்க முகம் தேவைப்பட்டது. மம்தா பானர்ஜிக்குக் கூடவருவதற்குக் கூட்டாளி தேவைப்பட்டது.

மம்தா பானர்ஜியுடன் கூட்டணி அமைத்தபோது, பாஜகவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. 1999ல், கவனிக்கத்தக்க தேர்தல் வெற்றியைப் பெற்றது. அதுவே, மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்ற மம்தா பானர்ஜி வழங்கிய துரும்பாகியது.
அதன்பின்னரான கால்நூற்றாண்டிலே, “துரும்பைத் தூணாக்கும்” வல்லமை கொண்ட பாஜக தனித்தே வளர்சியடைந்துவிட்டது.
அதுவே, 2026ல் வளர்த்த கடா – மார்பில் பாய்ந்த கதையாகிவிட்டது. மம்தா பானர்ஜியைத் தோற்கடித்து, பாஜக ஆட்சிப்பீடமேறியுள்ளது.
அதனால், மம்தா பானர்ஜி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளார்.
மாயாவதி, ஜெயலலிதா என்ற வரிசையில், இந்தியாவின் பெண் அரசியல் ஆளுமைகளிலே மம்தா பானர்ஜியும் ஒருவராகும்.
2007ன் நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டமே, மம்தா பானர்ஜி அரசியலின் மைல்கல்லாகும்.
கிழக்கு இந்தியாவிலே, பத்துக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதே மேற்கு வங்கமாகும். அங்கே, 1977ல் ஆரம்பமாகிய இடதுசாரிகளின் ஆட்சி எஃகு கோட்டையாகவே வலுவடைந்திருந்தது. அத்தகையதொரு சூழலிலேயே, ‘மா, மாட்டி, மனுஷ்’ (தாய், தாய்மண், மக்கள்) என்னும் முழக்கத்துடன் 2011 சட்டசபைத் தேர்தலிலே இடதுசாரிக் கூட்டணியை மம்தா பானர்ஜி தோற்கடித்தார்.
அதனூடாக, சாத்தியமற்றது என்று பரவலாகக் கருதப்பட்ட ஒரு விடயத்தை சாத்தியமாக்கினார். வெற்றிகரமான பிராந்தியக் கட்சியின் தலைவராக, தேசத்தின் வலிமையான எதிர்க்கட்சி அரசியல்வாதியாக வளர்ச்சியடைந்தார்.
ஆனாலும்கூட, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி, மதரீதியாக வாக்குகள் பிரிந்தமை மற்றும் வாக்காளர் பட்டியலைச் சுற்றியுள்ள சர்ச்சை போன்றவற்றின் வலுவான கலவை 2026 சட்டமன்றத் தேர்தலிலே மம்தா பானர்ஜியைத் தோற்கடித்தது.
இருப்பினும், மம்தா பானர்ஜியுடைய கட்சியை வாக்களர்கள் முற்றிலுமாக நிராகரித்ததாகச் சொல்லமுடியாது.
பாஜகவுடன் ஒப்பிடும்போது, சுமார் 30 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்றார். 2.6 கோடி வாக்குகள் கிடைத்தன. அந்தவகையிலே, 40 விழுக்காடு வரையான வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டார்.
மாநில சட்டப்பேரவையில் 80 உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர். டெல்லியிலே, 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதனால், ஆட்சியதிகாரத்தை இழந்தபின்னரும்கூட, மம்தா பானர்ஜி சக்தி வாய்ந்த அரசியல் கட்சித் தலைவராகவே தோற்றமளித்தார்.
ஆனால், கண்ணிமைக்கும் வேகத்தில் காட்சிகள் மாற்றமடைய ஆரம்பித்தன.
மிகப்பெரிய அதிர்ச்சி சட்டப்பேரவையிலேயே ஆரம்பமாகியது.
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளராக சட்டோபாத்யாவை கட்சி முன்னிறுத்தியது. அதற்கு எதிராக 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் திரண்டனர். சட்டப்பேரவைக் கட்சியைக் கைப்பற்றினர். அதன்பின்னர், அதிருப்தியாளர் குழுவிலிருந்து ரிதப்ரதா பானர்ஜி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அஃது, மாநில அளவிலான ஒரு கிளர்ச்சியாகவே ஆரம்பத்தில் தெரிந்தது. ஆனால், டெல்லிப் பாராளுமன்றத்திலே எதிரொலிக்க அதிககாலம் தேவையிருக்கவில்லை.
மொத்தமுள்ள 28 பாராளுமன்ற உறுப்பினர்களிலே, 20 அதிருப்தியாளர்கள் பாஜக தரப்புடன் கைகோர்த்துக்கொண்டனர். வெளிப்படையாக பாஜகவில் இணையவில்லை.
மாறாக, ‘இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி’ என்னுமொரு “லெட்டர் பாட்” கட்சியில் இணைந்துகொண்டனர். அதனூடாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சட்டரீதியான தகுதிநீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே இத்தகைய வியூகத்தைக் கையாண்டுள்ளதாகத் தெரிகின்றது. ஏனெனில், ஒரு கட்சியின் பாராளுமன்றக் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து சென்றால், அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என்றே இந்திய கட்சித்தாவல் தடைச் சட்டம் சொல்கின்றது.
ஒருபுறம், சட்டமன்ற உறுப்பினர்களின் கிளர்ச்சியும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலும் நடைபெறுகின்றன. மறுவளத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளில் கட்சிக்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதனால், கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடுகின்றன. அதன்மூலமாக, கட்சிக் கட்டமைப்புகள் சிதைக்கப்படுகின்றன.
ஏன் இந்த நிலை என கேள்வி எழுகின்றது?
தற்போதைய காலகட்டத்திலே, பாரதிய ஜனதாக் கட்சி அசுரபலத்துடன் காணப்படுகின்றது. அதனால், மம்தா பானர்ஜி தரப்பு திணறடிக்கப்படுவதாகவும் சொல்லலாம்.
ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. திரிணாமூல் காங்கிரஸ் சித்தாந்த ரீதியாக வளர்ச்சியடையவில்லை.
மாறாக, மம்தா பானர்ஜியின் ஆளுமை அடையாளத்தினாலும், ஆட்சி அதிகாரத்தினாலுமே வளர்ச்சியடைந்திருக்கின்றது.

அதனாலேயே, அப்பளம் போன்று எளிதில் நொறுங்குகின்றது
ஒற்றை நபரின் அடையாளத்தை மட்டுமே முன்வைத்து வளருகின்ற எந்தவொரு அமைப்புக்குமே, இத்தகையவொரு நெருக்கடி ஏற்படுமென்பதே, மேற்கு வங்கத் தேர்தல் முடிவு சொல்லும் செய்தியாகும்.
![]()