பாகிஸ்தானுக்கு துருக்கியின் இராணுவ உதவி!… இந்திய- துருக்கி முரண்பாடுகளின் பின்னணி…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி அதிபர் எர்துவான் அண்மையில் தெரிவித்துள்ளார்)
இந்தியாவுடனான துருக்கியின் உறவுகளை ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மிக வலுவாக உள்ளதை அண்மைய போரின் பின்னர் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு, இந்தியாவிடமிருந்து அது விலகி இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணமாகும்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில் சீனா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சீனாவை போல் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை துருக்கியும் தற்போது செய்து வருகிறது.
பாகிஸ்தானின் ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் பல உதவிகள் செய்யப்படும் என்று துருக்கி அறிவித்துள்ளதால் இந்தியாவுக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மே மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பாகிஸ்தானுக்கு உதவி செய்த துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு கடும் எதிர்ப்பு இந்தியாவில் எழுந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor (ஒப்பரேஷன் சிந்தூர்) ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதற்கு எதிராக பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தியது.
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் இந்நடவடிக்கைக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகள் ஆதரவாக இருந்தன. துருக்கியின் ஐந்நூறுக்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவி செய்த துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளை
வர்த்தக, இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்க குரல்கள் கடுமையாக எழுந்துள்ளன.
பாகிஸ்தானின் நண்பன் துருக்கி!
இந்நிலையில் பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி அதிபர் எர்துவான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைப் பாராட்டி எர்துவான் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி நாட்டுக்கு இந்தியாவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நின்றது போல, எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம். பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க என்று அதிபர் எர்துவான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பற்றி துருக்கி:
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு துருக்கிக்கும் அது முக்கியமானது என்று 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் எர்துவான் கூறினார்.
எங்கள் காஷ்மீரி சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக துன்பப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் உறுதியாக பாகிஸ்தானுடன் உள்ளோம். ஐநா பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் என்று துருக்கி அதிபர் பாகிஸ்தான் பாராளமன்றில் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்னைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது. இதற்கு சர்வதேச நீதி மூலமே தீர்வு காண முடியும். இந்த வகையான தீர்வுதான் அனைவருக்கும் நன்மை தரும். நீதி, அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் மக்களை எப்போதும் மறக்கவே முடியாது என்றும் எர்துவான் கூறினார். அப்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் எர்துவானின் பேச்சை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. இந்திய நாட்டின் உள்விவகாரங்கள் குறித்து துருக்கி பேசக்கூடாது என்று இந்தியா கடுமையாக கூறியிருந்தது.
இந்தியாவுடனான துருக்கியின் உறவு:
இந்திய பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. பாகிஸ்தான்
தீவிரவாதத்துக்கு துணை செய்வதோடு, இந்திய நாட்டுக்கு சொந்தமான காஷ்மீரை உரிமை கொண்டாடி வருகிறது என இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல் இந்தியாக்கும் , சீனாவுக்கும் இடையேயும் மோதல் போக்கும் இருக்கிறது. இதனால் சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு அதிகளவில் நிதி உதவி, கடனுதவி செய்கிறது. மேலும் பல ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது.
பாகிஸ்தானில் தற்போது பொருளாதாரம் பெரும் சிக்கலில் உள்ளது. இதனை சாதகமாக்கி சீனா, அந்த நாட்டுடன் நெருக்கம் காட்டி வருகிறது. பாகிஸ்தான் – சீனாவின் இந்த நெருக்கம் என்பது இந்தியாவுக்கு ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணம் இருநாடுகளும் இந்திய நாட்டுடன் மோதலை கடைப்பிடிப்பது தான். இதற்கிடையே தான் தற்போது இந்தியாக்கு பெரும் தலைவலி கொடுத்தது போல பாகிஸ்தான்
நாட்டின் ராணுவத்தை பலப்படுத்தும் பணியை துருக்கி கையில் எடுத்தள்ளது.
இதுதொடர்பாக துருக்கி நாட்டின் அதிபர் தையிப் எர்துவான் ‘பாகிஸ்தான் பாதுகாப்பு துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தாராக உள்ளோம். பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த உதவி செய்யப்பட உள்ளத என தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறை:
அத்துடன் துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த கம்பெனி பாகிஸ்தானில் உற்பத்தி தொடங்குவதற்கான வசதியை ஏற்படுத்த உள்ளது. அதாவது துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறை நிறுவனமாக ‘ரெப்கான்’ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் அதன் புதிய கிளை பாகிஸ்தானில் அமைய உள்ளது.
இந்த நிறுவனம் பாகிஸ்தானில் 155 மில்லி மீட்டர் பீரங்கிகளை தயாரிக்க தொழிற்சாலையை தொடங்க உள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் வெடிப்பொருள் பாதுகாக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் வெடிப்பொருட்களை சேமித்து வைக்க முடியும்.
முன்னதாக இதுதொடர்பான ஒப்பந்தம் துருக்கி – அமெரிக்கா இடையே நடந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி 155 மில்லி மீட்டர் பீரங்கிக்கான குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை அமெரிக்காவின் டெக்சாஸில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
துருக்கி – பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தம் என்பது துருக்கியின் ரெப்கான் மற்றும் பாகிஸ்தானின் வா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இடையே நடந்துள்ளது.
பாகிஸ்தானின் வா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் என்பது அந்த நாட்டின் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், குண்டுகள், இராணுவ வீரர்களுக்கான பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்கி வருகிறது. இருநிறுவனங்களும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் துருக்கியேயிடம் இருந்து அதிக ராணுவ உதவிகளை
பெற முடியும். இது உண்மையில் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக பார்க்கப்படுகிறது.
துருக்கி – இந்தியா கருத்து வேறுபாடு:
காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு, இந்தியாவிடமிருந்து அது விலகி இருப்பது ஒரு முக்கிய விஷயமாகும். இது தவிர 2022 இல் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையேயான மோதலில் இந்தியாவும் துருக்கியும் எதிரெதிர் தரப்பில் இருந்தன.
அஜர்பைஜான் துருக்கியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. நீண்டகாலமாக முரண்படும் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் மோதல் தொடர்கிறது. ஆனால் எப்போதும் அஜர்பைஜானுக்கு துருக்கியின் ஆதரவு இருந்தது. அந்த நேரத்தில் இந்தியா ஆர்மீனியாவுக்கு ஆதரவு அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()