முச்சந்தி

பிரதமர் ஹரிணிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைந்த பின்னரான அமைதி காலத்தில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று தனது கட்சியினருக்கு கூட்டமொன்றில் கூறியதாக தெரிவிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு திட்டமிடப்படுவதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் எதிர்க்கட்சி இறுதி முடிவெதனையும் எடுக்கவில்லை என்றும், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிக்கள் குழுவில் கலந்துரையாடியும் இது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் இந்த கருத்து தேர்தல் சட்டத்தை பகிரங்கமாக மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும், இவ்வாறான கருத்து தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை பிரதமரின் இந்த கருத்து தொடர்பில் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பல்வேறு தரப்பினரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button