மதுபானசாலைக்கு அனுமதி பெற 8 கோடி ரூபா இலஞ்சம் ரணில் அரசுக்கு வழங்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மன்னார் பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,இதற்கு 8 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தன்னிடம் தொலைபேசியில் முறையிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றவிவகாரங்கள் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற முன்னாள் ஜனாதிபதிகள்,அவர்களின் வாழ்க்கைத்துணைகள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை குறைத்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஒருநாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மன்னார் பகுதியில் மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கு மதுபானசாலை அனுமதிபத்திரம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது., அதற்காக 8 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என முறையிட்டார். இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு அவருக்கு நான் அறிவுறுத்தினேன்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சித்ரசிறி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.. இந்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இதற்கமைய 1982 ஆம் ஆண்டு பாராளுமன்ற ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்தால் சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது.ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் மறக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விடயங்களை கூறுகின்றார்கள் .பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எவருக்கேனும் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை காணப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கையை முன்வைக்கலாம்.அந்த கோரிக்கை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
![]()