முச்சந்தி

புலம் பெயர் நாடுகளில் தமிழர்களின் அரசியல் வகிபாகம்… உலக அரசியலில் தமிழர் ஆளுமை வளர்ச்சி…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலக அரசியலில் அதிகரிக்கும் தமிழர்களின் செல்வாக்கால், பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழர்கள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து ஓரணியில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

உலக அரங்கில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் பலமாக அமைய சாத்தியங்கள் என பல சிங்கள ஊடகங்கள் அச்சத்தை அள்ளித் தெரிவிக்கின்றன.

ஆஸி தேர்தலில் ஈழத்தமிழ் அஷ்வினி வெற்றி !

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் அஷ்வினி எனும் ஈழத்தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண் பெருவெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஷ்வினி அம்பிகைபாகர் (Ash Ambihaipegar), ஈழத்தில் புகழ் பெற்ற, குழ்ந்தை கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி ஆவார். சிட்னியில் உள்ள பார்ட்டன் (Barton) தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

அத்துடன் 66 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டி அவுஸ்திரேலிய பாராளுமன்றம் செல்கிறார். வெற்றியீட்டியிருக்கும் தமிழ்ப் பெண்ணான அஷ்வினி அம்பிகைபாகர் உலகத் தமிழருக்குப் பெருமை சேர்ப்பவராக அமைகிறார். 2022 இல் கோர்ஜெஸ் றிவர் கவுன்சிலராகத் தெரிவாகியிருந்த அவர் ஒரு சட்ட நிபுணராகவும் பயிற்றப்பட்டவர்.

அவுஸ்திரேலிய கடந்த பாராளுமன்றில் ஆட்சியில் இருந்த தொழிற் கட்சி தேர்தலுக்கு முன் 77 ஆசனங்களும் , எதிர்க்கட்சி 53 ஆசனங்களையும் கொண்டிருந்தது. ஆனால் தற்போதய தேர்தலில் எதிர்க்கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. குடிவரவுக் கொள்கையில் மாற்றம், அகதிகள் விரோத நடவடிக்கையே எதிர்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஐந்து வார தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்கட்சி தலைவர் பீட்டர் டட்டனை விட சிறப்பாக செயல்பட்ட பிரதமரின் ஆளும் கட்சி இத் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் முன்பே தெரிவித்தன.

அதற்கேற்ப தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பெரும்பான்மை அரசாங்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்தோணி அல்பானீஸ் தலைமையில் இரண்டாவது முறையாக அமையும் அரசில் ஈழத்தமிழ் பெண் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் ஈழத் தமிழர் வெற்றி:

2025 இத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல், சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் 6 தமிழர்கள் போட்டியிட்ட நிலையில், 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது வெற்றி பெற்றுள்ள அனிதா ஆனந்த் கனடாவின் ஒக்வில் கிழக்கு தொகுதியிலும், கேரி ஆனந்தசங்கரி ஸ்கார்பரவ்ப் பார்க் தொகுதியிலும், பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியில் யுவனிதா ஆகியோர் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைய உள்ள நிலையில், அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அரங்கில் கனடாவின் அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறும் சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளது. கடந்தமுறை ஹரி ஆனந்த சங்கரி நாடாளுமன்றத்துக்கு தெரிவானதுடன், அமைச்சுப் பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஓரளவு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளனர்.

பிரித்தானியவில் தமிழ் பெண் எம்.பியாக வெற்றி:

கடந்த ஆண்டு 2024 பிரித்தானியத் தேர்தலில் தமிழ் பெண்ணின் வெற்றியானது, ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் பலமாக அமைய சாத்தியங்கள் என பல சிங்கள ஊடகங்கள் அச்சத்தை அள்ளித் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய 2024 தேர்தலில் எட்டு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டியிட்டிருந்தனர்.

இவர்களுள் தொழிலாளர் கட்சியின் சார்பாக உமா குமாரன் (Uma Kumaran) போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானியாவில் பல தமிழர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் தேர்தலை உற்று நோக்கி வந்தனர்.

இந்நிலையில், 19,145 வாக்குகளை பெற்று உமா குமரன் பெரும் வெற்றியடைந்தார். இந்த வெற்றியின் மூலம் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்று சாதனையை உமா குமரன் படைத்துள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களையும் விட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ள இவ்வரலாற்று சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தலிலும் தமிழர்கள் போட்டி:

கடந்த காலங்களில் அமெரிக்க தேர்தலிலும் சில தமிழர்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதால் இவர்கள் அனைவரும் ஒரு பொது இணக்கப்பாட்டுடன் செயல்படும் தேவை எழுந்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வெற்றி பெற்ற பெண் எம்பிக்கள்:

இலங்கை தமிழர்கள் புலர்ந்த நாடுகளில் இதுவரை ஆறு பெண்கள் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளார்கள். நிச்சயமாக இந்த வெற்றிகள் நாம் கொண்டாட கூடிய விடயம்தான். புலம்பெயர் இலங்கை தமிழர் வாழும் நாடுகளில் அதிகமான அளவில் அந்தந்த நாட்டு தேர்தல்களில் அதிகம் பங்கு போற்றுகிறார்கள்.

இதற்கு தாங்கள் வாழும் புலம் பெயர்ந்த நாட்டின் அரசியல் சமூக சிந்தனை மற்றும் அந்நாடுகளின் வரலாறு போன்றவற்றில் உள்ள புரிந்துணர்வுதான் காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இவர்களில் பெருமைக்கு உரிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனடா ராதிகா சித்சபேசன் , நோர்வே கம்சி குணரத்தினம் , நியூ சிலாந்து வருஷி வால்டேர் , இங்கிலாந்து உமா குமரன் , கனடா ஜுவனிதா நாதன் , ஆஸ்திரேலியா அஷ்வினி அம்பிகைபாகர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கனடாவில் ராதிகா 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்ந்துள்ளார்.

நோர்வேயில் கம்சி குணரத்தினம்:

கம்சாயினி குணரத்தினம் இலங்கைத் தமிழ் பின்புலம் கொண்ட நோர்வே தொழிற் கட்சி அரசியல்வாதி ஆவார். 2021 நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் இவர் ஒஸ்லோ தொகுதியின் தொழிற் கட்சியின் இரண்டாவது வேட்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

இவர் ஒஸ்லோ மாநகரத்தின் துணை முதல்வராக 2015 முதல் 2021 வரை பதவியில் இருந்தார். யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பிறந்தவர், தனது மூன்றாவது வயதில் 1991 இல் பெற்றோருடன் புலம் பெயர்ந்து நோர்வே சென்றார். அரசியலில் கம்சாயினி தொழிற்கட்சியின் ஒஸ்லோ மாநகரக் கிளை துணைத் தலைவராகவும், இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அரசியலில் அதிகரிக்கும் தமிழர்களின் செல்வாக்கால், பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழர்கள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து ஓரணியில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தற்போதய கனடா, அவுஸ்திரேலிய கடந்த வருட பிரித்தானியத் தேர்தல் வெற்றி, ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் பலமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் மேற்கத்திய அரசியலில் செல்வாக்கும் செலுத்தும் நபர்களாக உள்ளனர்.

இவர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களுக்கான பொது அரசியல் கோட்பாடுகளை வகுத்து செயல்படுவதன் மூலம் சர்வதேச ரீதியில் தமிழர் உரிமைக்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button