நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த 15 பெண்களில் மூவர் அலையில் சிக்கினர்; இருவர் உயிரிழப்பு

நாயாற்று கடலில் குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இருவர் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றையதினம் (31) இடம்பெற்றுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.
இந்தப் பெண்கள் நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மற்றைய யுவதியை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் 47, 21 வயதுடைய பெண்களே நீரில் அடித்து செல்லப்பட்ட வேளை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல், காணாமல்போன யுவதி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் 20 வயதான இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா எனும் யுவதியே சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய இன்னுமொரு யுவதியும் சிகிச்சை பலனின்றி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சிவபாலராஜா பிரியந்தினி என்பவரே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் சென்ற வாகனத்துடன் ஏனையவர்களை கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()