இலங்கையில் சீன அலை இந்தியாவுக்கு ஆபத்து

தேசிய மக்கள் சக்தியின் அரசின் சீனா, இந்தியா ஆகிய நாடுகளை பகைத்துக்கொள்ளாமல் கையாளும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களால் எதிர்காலத்தில் சீனாவில் மிதமிஞ்சிய அலை என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியானாலும் ஆச்சரியம் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக்கட்சி மத்தியகுழு உறுப்பினரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவாக 2,26,343 வாக்குகளை பெற்றவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுராவின் சீனா மற்றும் இந்தியா விஜயங்கள் தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்;

புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற அநுர நான்கு மாதங்களுக்குள் இரண்டு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியாவில் இருந்தும், சீனாவில் இருந்தும் பல முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.

இதில் ஏட்டிக்கு போட்டியாக இந்தியாவின் உதவிகளை விட பல மடங்கு உதவிகளாக ஏறக்குறைய 27 திட்டங்களுக்கு சீனா முதலீடு செய்ய முன்வந்துள்ளது. பொருளாதார உதவித்திட்டங்கள் அபிவிருத்திகள் என்பன ஒருநாட்டு வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை அதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

இதில் பார்க்கவேண்டிய விடயம் இந்தியாவும், சீனாவும் எப்போதுமே கீரியும், பாம்பும் போன்ற நிலையில்தான் அந்த நாடுகளின் கடந்த கால வரலாறுகளை நோக்கலாம்.

இரண்டு நாடுகளுக்கும் இலங்கை ஒரு கேந்திர நாடாக உள்ளது இரண்டு நாடுகளுக்கும் உளவுத்துறை விடயங்களை கையாள இலகுவான தளமாக இலங்கையை பயன்படுத்தக் கூடிய வாய்புகள் உள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை திருகோணமலை துறைமுகம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக அவசியமான துறைமுகமாக கருதப்படுகிறது.

சீனாவின் முதலீடுகள் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கூடுதலாக இருக்குமானால் அது திருகோணமலை துறைமுகத்திலும் சீனா கால் ஊன்றக்கூடிய வாய்புகள் இல்லாமல் இல்லை.

இவ்வாறான நிலையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் கேள்விக்குறியாக கூட மாறலாம்.

இலங்கையின் பூகோள அரசியலிலும், ஈழமக்களின் அரசியல் தீர்வு விடயங்களிலும் இந்தியாவை புறம் தள்ளி எந்த தீர்வும் பெறமுடியாது என்பது உண்மை.இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இந்தியாவும் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக மட்டும் அன்றி இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காக இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உண்டு எனவும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button