நாய் மீது ‘பைக்’கை மோதியவருக்கு கோர்ட் உத்தரவால் கிடைத்தது நிம்மதி

மும்பை தெரு நாயை இரு சக்கரவாகனத்தால் மோதியவர் மீது, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது தொடர்பான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை, மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மஹாராஷ்டிரா மாநிலம்மும்பையைச் சேர்ந்தவர் மனாஸ் கோட்பலே.

‘ஆன்லைன்’ வாயிலாக உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், 2020ல், மும்பை மரைன் டிரைவ் பகுதியில் உணவு வினியோகிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது சாலையில் வந்த தெரு நாய் மீது, அவரது வாகனம் மோதியது. இதில் நாய்க்கு காயம் ஏற்பட்டது. மனாஸ் கோட்பலேயும் காயம் அடைந்தார்.

 

தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் ஒரு பெண், இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதாக, இவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதை எதிர்த்து மனாஸ் கோட்பலே, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ரேவதி, பிரித்விராஜ் சவான் ஆகியோர் அடங்கியஅமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றை, அதன் உரிமையாளர்கள் குழந்தைகளாக அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பாவிக்கின்றனர் என்பது உண்மை தான். ஆனால், நாய்களும், பூனைகளும் மனிதர்கள் அல்ல.

எனவே, மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது தொடர்பான பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு இழப்பீடாக, மாநில அரசு 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த தொகையை வழக்குப் பதிவு செய்த போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button