கட்டுரைகள்

அப்படியும் இப்படியும்!… சங்கர சுப்பிரமணியன்.

தமிழ்நாட்டின் அரசியலும் தேர்தலும் தமிழ்நாட்டினருக்கு முக்கியமோ இல்லையோ மற்றவர்களுக்கு அது எப்போதுமே பேசுபொருளாக இருந்து வருகிறது. காரணம் தமிழ்நாட்டினர் யாரை எப்போது தேர்ந்தெடுப்பார்கள் எந்த காரணத்துக்காக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். எந்த அரசியல்வாதி எதைநோக்கி காய் நகர்த்துகிறான் என்பதை அவ்வளவு எளிதாக தீர்மானித்து விடமுடியாது. ஆகவே தமிழ்நாட்டு தேர்தலை இந்தியர்கள் உட்பட அனைவரும் உற்றுநோக்கி கருத்தும் சொல்கிறார்கள்.

தமிழ் நாட்டின் பிரச்சனைகளே தலைக்குமேல் இருக்க தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிரச்சினைக்குரியவற்றை எல்லாம் விலைக்கு வாங்கி வினையாக்குகிறார்களே என்று நான் பல வேளைகளில் நினைப்பதுண்டு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அண்டை மாநிலப் பிரச்சனைகளில் தலையிடலாம் தவறில்லை. கர்னாடக அரசியலில் தலையிடலாம் அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் காவிரி நீர்ப்பிரச்சனை உள்ளது. கேரள அரசியலில் தலையிடலாம் அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. ஆந்திர அரசியலில் தலையிட செம்மரக் கடத்தல் கொலைகள் இருக்கிறது.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன பிரச்சினை இருக்கிறது? ஶ்ரீமாவே பண்டார நாயக்கா லால்பகதூர் சாஸ்திரி காலத்திலேயே எத்தனையோ லட்சம் தமிழரை அனுப்பிவிட்டார்களே. மேலும் கள்ளத்தோனி என்று பரிகசிக்கும் அளவுக்கு அவமரியாதையுடன் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலிவேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்து இப்போது யாரும் செல்வதில்லையே?

மத்திய அரசுடன் கூட அரசியல் பண்ணலாம். உரிமைகள் எல்லாம் பறிக்கப் படுவதால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் ஏன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்சனைகளில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அவர்களின் இந்த ஈடுபாட்டில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்பதை எப்படி சொல்ல முடியும். அஸ்ஸாமில் வங்கதேச அகதிகள் பிரச்சினை இருக்கிறது. அரணாசலப்
பிரதேசத்தில் தென்சீனம் மற்றும் பூட்டான் நாட்டிலிருந்து குடியேறியவர்களுக்காக தலைதூக்கும் பிரச்சினை இருக்கிறது. இவைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதுண்டு.

இப்படிப்பட்ட சூழலில் அஸ்ஸாமியரோ அருணாச்சல பிரதேசத்தினரோ அவர்களது அரசியலில் எவரும் தலையிட வேண்டாமென்று சொல்வதில்லை. சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் பிரச்சினையில் கூட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தலையிட்டதை அம்மக்கள் வரவேற்கவே செய்தனர். ஆனால் அவர்கள் வரவேற்கிறார்களோ இல்லையோ அது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.

காஷமீர் பிரச்சினை ஆரம்பித்த நாளில் இருந்தே பாகிஸ்தான் இந்திய பிரச்சனை என்று சும்மா இருந்ததில்லை. காஷ்மீரில் வாழ்பவர்களுக்கும் தெரியும் பாகிஸ்தானால் ஒன்றும் பண்ண இயலாது என்று. காஷ்மீரை வைத்து பாகிஸ்தானில் அரசியல் செய்தாலும் காஷ்மீர் வாழ்மக்கள் பாகிஸ்தானியரைப் பார்த்து எங்கள் அரசியலில் தலையிடாதீர்கள் என்றோ எங்களுக்கு நீங்கள் அரசியல் சொல்லித் தரவேண்டாம் என்றோ சொல்வதில்லை. ஒரு இனமக்கள் தம்மினமக்கள் இன்னொரு இடத்தில் பிரச்சினைகளை சந்திக்கும் போது குரல்கொடுப்பார்கள். அதில் ஆதாயம் இருக்கிறது என்பதை மட்டுமே எண்ணிப் பார்த்து குரல் கொடுக்கமாட்டார்கள்.

பூடான் பிரச்சினையில் சீனா தலையிடுவதும் பங்களாதேஷ் பிரச்சினைகளில் இந்தியா தலையிடுவதும் இஸ்ரேல் உருவானபோது கேரள நம்பூதிரிகள் புலம்பெயர்ந்ததும் இன அடிப்படையில் நடைபெறும் நிகழ்வுகள் என்பதை இன அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களால் ஓரளவுக்கு புரிந்த கொள்ள முடியும். நூற்றுக்கு நூறு பித்தாகோரஸ் தத்துவம் போல பலனை எதிர்பார்க்க முடியாது. அப்படியே யாரும் யார் அரசியலிலும் தலையிடக்கூடாது என்றால் அது பெரிய தேசிய இனமாக இருக்கக் கூடாது. நமக்கு என்ன நடந்தாலும் கேட்க நாதியின்றி சிறு இனக்குழுக்களாக இருந்தால் இந்த பிரச்சினைகள் எல்லாம் இராது.

ஒரு குடும்பத்தில் ஒரே பிள்ளயாக வேறு உறவுகளின்றி இருந்தால் எந்த பிரச்சினையும் வராது. மாறாக அண்ணன் தம்பி அக்கா தங்கை சிற்றப்பன் பெரியப்பன் என்று உறவுகள் சூழ்ந்திருந்தால் பிரச்சினைகளும் சூழ்ந்திருக்கவே செய்யும். கொசுவுக்கு பயந்து கொண்டு கோட்டையை விட்டு போய்விடமாட்டார்கள்.

நாமெல்லாம் ஒன்றாக தமிழ் தேசிய இனமாக சேரந்து வாழமாட்டோமா என்ற நப்பாசையுடன் வாழும் பரந்த நோக்கு கொண்டு வாழும் தமிழருக்கிடையே நான் தொண்டைமண்டலக்காரன் நான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவன் நான் நாஞ்சில் நாட்டான் நான் சோழமண்டலத்தான் நான் பாண்டிநாட்டான் என்று பெருமை பேசி இனத்தை கூறுபோடுவதில் நாட்டம்
இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு நாட்டு உள்நாட்டுப் பிரச்சினையில் அடுத்த நாட்டு அரசியல்வாதிகள் தலையிடலாமா? எங்கள் நாட்டு அரசியலில் ஏன் தலையிடுகிறீர்கள்?
எங்களுக்கு எவரும் அரசியல் கற்றுத்தர வேண்டாம்? என்பவர்களுக்கு அப்படித் தலையிடும் அடுத்த நாட்டு அரசியல்வாதிகளின் பதில் என்ன?

ஒரு நாட்டு உள்நாட்டு பிரச்சினை என்று எண்ணாமல் பல நாட்டினர் அரசியல் செய்து இலங்கையில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். அந்நாட்டினரிடம் எங்கள் நாட்டு அரசியலில் தலையிட நீங்கள யார் எனக்கேட்க முடியாத அளவுக்கு உலக அரசியல் வலை பின்னப்பட்டிருந்தது. ஏனெனில் அவர்கள் வாழும் உலகில்தான் நாமும் ஓர் அங்கமாக வாழ்கிறோம். நாமொன்றும் வேற்றுக் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.

ஆனால் தமிழர் என்ற உணர்வை மட்டும்
வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு தேர்தலுக்காக இலங்கையின் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா? இப்போது இந்த குழப்பத்தில் இருந்து விடுபட சற்று ஆலோசித்து பார்க்க வேண்டும். ஆலோசித்துப் பார்த்தால் புரிந்தும் புரியாமலும் சில தெரியவரும்.

சில இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களை வெறுப்பதுபோல் சில இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களை வெறுக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான தமிழர்கள் இரு பக்கமும்
அப்படி அல்ல. இதற்குண்டான தனிப்பட்ட காரணங்கள் அவர்களுக்கு மட்டுமே
தெரியும். பொதுவாக குறை எல்லா தேசிய இனங்களிலும் இருக்கிறது. சான்றாக இங்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாட்டினருக்கிடையே நிலவும் விருப்பு
வெறுப்புக்களைக் கூறலாம்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை தமிழ்நாடு சம்பந்தப்பட்டது. அது தமிழ்நாட்டு அரசியல் சம்பந்தப்பட்டது என்று குறுகிய கண்ணோட்டதில் இல்லாமல் அது தமிழரின் மானப்பிரச்சினை என்று உலகத் தமிழர் எல்லோரும் ஒன்று திரண்டார்களே அது ஏன்? அல்லது ஒரு சிலரின் எண்ண ஓட்டங்களோடு இணைந்து விலகி நிற்கவில்லையே ஏன்?

ஏனென்றால் பெரும்பாலான தமிழரின் உணர்வுகளை எவராலும் எளிதாக அழித்து விடமுடியாது. இதை நாம் கண்கூடாக
காணலாம். ஒரு சிலர் மட்டுமே எப்போதும் இதுமாதிரி செயல்களில் ஈடுபடுவார்கள். இது விதிவிலக்கு. இப்படிப்பட்ட சிலர் எல்லா தேசிய இனங்களிலும் இருப்பார்கள். இவர்களை நினைத்து வருந்துவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

இப்போது விசயத்துக்கு வருவோம். இவர்களுக்கு இந்திய அரசியலில் இலங்கையர் தலையிட வேண்டாம் அல்லது இலங்கைஅரசியலில் இந்தியர் தலையிட வேண்டாம் என்று கூறும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அல்லது இதையே சற்று மாற்றிச் சொல்வோம். அதாவது இலங்கை அரசியலில் இந்தியர் தலையிடவும் அல்லது இந்திய அரசியலில் இலங்கையர் தலையிடவும் யார் அதிகாரம் கொடுத்தது?

ஏதாவது ஒரு பிடிப்பில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் இருபக்கமும் அதை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் ஒரு விதிவைத்து மறுபக்கம் விதி கிடையாது என்றால் நடைமுறைக்கு ஒத்து வராது. நடந்து முடிந்த தமிழ்நாட்டுத் தேர்தலுக்காக இலங்கைத் தமிழர் இந்திய அரசியல்வாதிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தனிமனித விமர்சனமும் செய்திருக்கிறார்கள். அப்படி விமர்சனம் செய்பவர்களை குற்றம் சொல்லவும் முடியாது. அதற்கு அவர்கள் தரப்பு நியாயத்தையும் வைக்கிறார்கள்.

அதற்காக அவர்களை தமிழ்நாட்டு அரசியலில் ஏன் தலையிடுகிறீர்கள்? யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று எங்களுக்கு நீங்கள் சொல்லித்தராதீர்கள் என்று சொல்லமுடியுமா? அவர்கள் சொல்வதில் தவறொன்றும் இல்லை. நம் இனம் என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர்கள் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்வது ஏற்புடையதாயின் ஏற்பது ஏற்புடையதல்ல என்றால் விடுவது என்பதே சரி.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் விரும்பியோ விரும்பாமலோ நாமெல்லாம் தமிழ்தேசிய இனம். அதை மலேசிய தமிழ்தேசிய இனம் சிங்கப்பூர் தமிழ்தேசிய இனம் என்றெல்லாம் பிரிக்க முடியாது. எங்கிருந்தாலும் தமிழரே. வேண்டுமானால்
மலேசியத் தமிழர் சிங்கப்பூர் தமிழர் என்று சொல்லிக் கொள்ளலாம். நாம் வேண்டாம் என்றாலும் தொப்புள்கொடி உறவென்று பெரும்பான்மையினர் சொல்வதை ஒரு சிலரால் பென்சிலில் எழுதியதை அழிப்பான் வைத்து அழிப்பதுபோல் அழித்துவிட முடியாது.

வரலாற்றுப் பிழைகள் நிறையவே நடந்துள்ளன. பர்மாவில் இருந்நு துரத்தப்பட்ட தமிழரும் இலங்கையிலிருந்து வாழ்வுரிமை பறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப் பட்ட தமிழரும் மீண்டெழ முடியாமல் அழிந்தவர்கள் எத்தனையோ லட்சம்.
ஈழப்போரில் மாண்டவர்கள் ஒன்றரை லட்சம். இதற்கெல்லாம் காரணம் அரசியல் வாதிகள். பர்மா அரசியலில் தலையிடாத தமிழர் இலங்கை அரசியலில் மட்டும் ஏன் தலையிடுகிறார்கள்? நம் இனத்து அரசியல்வாதிகள் எங்கிருந்தாலும் நமக்கு நல்லது செய்யவில்லை. வேற்று இனத்து அரசியல்வாதிகளும் நமக்கு நல்லது செய்ததில்லை.

ஒரு மலையாள அரசியல்வாதியோ, தெலுங்கு அல்ல கன்னட அரசியல்வாதியோ இலங்கைத் தமிழர் அரசியலில் தலையிடுவதில்லை. தமிழர் என்பதால் இருநாட்டு அரசியலிலும் இருநாட்டு தமிழ் அரசியல்வாதிகளும் தலையிடுகிறார்கள். இல்லாவிட்டால் இதை முற்றாக தடுப்பதற்கு வழி தெரிந்த அன்பர் யாராவது சொன்னால் நல்லது. அப்படி ஒரு வழி தெரியாவிட்டால் காலம் பூராவும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அப்படி ஒருவழி கிடைத்து வெற்றிகரமாக அரசியல்வாதிகளைத் தடுத்து விட்டால் அடுத்தபடி திரைப்படம் பார்க்க விடாமல் தடுக்கலாம். திரைப்படப் பாடல்களைத் கேட்கவிடாமல் தடுக்கலாம். அப்புறம் உணவு, உடை, நூல்கள் என்று எங்கெல்லாம் பிரிவினை உண்டாக்க இயலுமோ அதை நோக்கி முன்னெடுப்பை எடுக்கலாம். இணைப்பதை விட பிரிப்பது வெகு எளிது.

தமிழர் ஒற்றுமையை ஒழிக்க நம்மால் இயலாதா? ஒரே ஆயுதம் உள்ளதே கைவசம். அது வேறொன்றுமல்ல. நாங்கள் வேறு நீங்கள் வேறு. சேர சோழ பாண்டியருக்கு நாம் ஒன்றும் சளைத்தவரல்ல. மலேசியத் தமிழர் அரசியலில் சிங்கப்பூர் தமிழர் எவ்வாறு மூக்கை நுழைக்கலாம் இலங்கைத் தமிழர் அரசியலில் தமிழ்நாட்டினர் எவ்வாறு தலையிடலாம்? புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட அரசியல் செய்பவரை வேறொடு வீழ்ப்போம். எங்கள் பகைவர் என்றோ இணந்தார் இங்குள்ள தமிழர் துண்டாடல் கண்டே என்றெல்லாம் கவிதை ஏற்றாமல் பாரதிதாசன் புதுவை மக்களுக்காக மட்டும் கவிதை இயற்றினாரோ? அல்லது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் மட்டக்களப்பு மக்களுக்கு மட்டும் கவிதை வடித்தாரோ?

அது அவர்கள் திருக்குறள், மணிமேகலை
சிலப்பதிகாரம் இவர்கள் இயற்றியது தேவாரமும் திருவாசகமும் நாமா இயற்றினோம் அதை ஏன் நாம் படிக்க வேண்டும்? என்றெல்லாம் எதிர்காலத்தில் பிரச்சினைகளை கொண்டு வருவார்களோ என்றெல்லாம் எண்ணவைக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள விரிசலை பெரிதாக்கி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழினத்தை கூறுபோட்டு பங்கப்படுத்தி விடுவார்களோ என்று கூட நினைக்க வைக்கிறார்கள்.

தமிழிக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடும்போது இனி எந்தத் தமிழைப் பாடப் போகிறோம் என்ற நிலை வந்து விடுமோ?  சமீபத்தில் ஒரு காணொலியில் ஒரு அன்பர் இதற்கு மேலும் தி. மு. க. வுக்கு ஓட்டு போடப் போகிறாயா? போ போ போட்டுக்கோ என்று சொன்னதைப்போல்
இனிமேலும் நான் வேறு நீ வேறு என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கப் போகிறீர்களா? சொல்லு சொல்லு
சொல்லிக்கோ என்று கடந்து போக வேண்டியதுதான். அல்லது அப்படியெல்லாம் நடந்து அதைப் பாரக்கும்
நிலைக்கு பரந்த நோக்குள்ள தமிழர்
விடமாட்டார்கள் என்ற ஆறுதலுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button